10 ஆண்டுகளில் சீமைக் கருவேலம் அகற்றப்படும்: தமிழக அரசு!

Published On:

| By admin

சீமைக் கருவேலம் மரங்களைப் படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்த கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்கை நேற்று (ஏப்ரல் 4) சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதிகள் சதீஷ்குமார், பாதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில், தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக வரைவு கொள்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டதாகவும், இறுதிக் கொள்கை முடிவை அறிவிக்க எட்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.
தற்போது சீமைக் கருவேலை மரங்கள் அகற்றப்பட்டு வருவதாகவும், 700 ஹெக்டேர் பரப்பு அடையாளம் காணப்பட்டு, அவற்றை அகற்றும் பணி தொடங்கி விட்டதாகவும், சீமைக் கருவேல மரங்களை படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்த கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதற்கடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் வளராமல் கண்காணிக்கவும் செயல் திட்டம் உள்ளதாகவும் தமிழ்நாட்டில் பரவியுள்ள 196 வகையான அந்நிய மரங்களில் 23 வகையை அப்புறப்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்குகளின் விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

**- ராஜ்-**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share