ஹத்ராஸ் சம்பவம்: எம்.பி.ஜோதிமணி சத்தியாகிரக போராட்டம்!

Published On:

| By Balaji

ஹத்ராஸ் சம்பவத்தைக் கண்டித்து கரூர் காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி நேற்று (அக்டோபர் 6) கரூரில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கக் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி , பிரியங்கா காந்தி, மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆகியோர் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி சென்றனர். அப்போது அங்கு 144 தடை விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து அவர்கள் செல்ல நொய்டா போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 5 பேருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது.

அன்றைய தினம், தமிழகத்திலிருந்து கரூர் எம்.பி. ஜோதிமணியும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைப் பார்க்கச் சென்றிருந்தார். ஆனால் ராகுல் காந்தியுடன் தனி பேருந்தில் சென்ற காங்கிரஸ் எம்.பி.களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் ஹத்ராஸ் சம்பவம், ராகுல் காந்தியை கீழே தள்ளியது, பிரியங்கா காந்தியின் குர்த்தாவை பிடித்து இழுத்தது ஆகியவற்றைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் எம்.பி.ஜோதிமணி தலைமையில் நேற்று கரூர், காந்தி சிலை முன்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது உபி காவல் துறையினர் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றனர். குற்றவாளிகளை உபி அரசு பாதுகாக்கிறது என்று காங்கிரஸ் கட்சியினர் குறிப்பிட்டனர்.

ஜோதி மணி கூறுகையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க எதிர்க்கட்சியினருக்கு அனைத்து உரிமையும் உண்டு. ஆனால் அவர்களை அனுமதிக்காமல் கிராமத்தை போலீசார் சுற்றி வளைத்திருந்தனர் என்று தெரிவித்தார். மேலும், நாட்டில் எந்த ஒரு பெண் பாதிக்கப்பட்டாலும், அவருக்கு துணையாக காங்கிரஸ் கட்சி நிற்கும் என ராகுல் காந்தி கூறியதால், காங்கிரஸ் மீது பெண்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றார்.

**-பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share