டிஜிட்டல் திண்ணை: செந்தில் பாலாஜி சர்வாதிகாரம்… கரையும் கரூர் திமுக!

Published On:

| By Balaji

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

“அதிமுகவிலிருந்து அமமுகவுக்கு வந்து அங்கிருந்து திமுகவுக்கு வந்த 41ஆவது நாளிலேயே மாவட்டப் பொறுப்பாளர் என்ற முக்கியமான பதவியைப் பெற்றார் செந்தில் பாலாஜி.

செந்தில் பாலாஜி கரூர் திமுகவுக்கு வந்ததும் மேஜிக் எல்லாம் நடக்கும் என்று ஒருவித எதிர்பார்ப்பில் இருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால், ஸ்டாலினுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக கரூர் திமுகவில் செந்தில் பாலாஜிக்கு எதிராக மௌனமான எதிர்ப்பு அலை வீசிக்கொண்டிருக்கிறது. அந்த அதிருப்தியின் வெளிப்பாடாக தற்போது திமுகவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி உள்ளிட்ட பல நிர்வாகிகள் அதிமுகவில் இணைய இருக்கிறார்கள்.

கரூர் சின்னசாமி 1980இல் எம்ஜிஆர் காலத்தில் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர். வாரியப் பதவிகளையும் வகித்தவர். 1989இல் ஜெயலலிதாவின் சேவல் சின்னத்தில் தேர்தலைச் சந்தித்தவர். அந்த விசுவாசத்துக்கு அடையாளமாக 91இல் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சரானார். அதன்பின் எம்.பி ஆனார். மெல்ல மெல்ல அவர்மீது ஜெவுக்கு அதிருப்தி ஏற்பட மாசெ பதவியிலிருந்து விலக்கி ஓரங்கட்டினார். கட்சிக்குள் புறக்கணிக்கப்பட்டதாகக் கருதி திமுகவுக்கு வந்தார் சின்னசாமி.

கரூர் சின்னசாமி அதிமுகவில் கோலோச்சியபோது அவரது சிபாரிசின் பேரில் கவுன்சிலர் ஆனவர்தான் செந்தில் பாலாஜி. ஆனால், இன்று திமுகவில் செந்தில் பாலாஜியாலேயே முற்றாக தான் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்த சின்னசாமி மீண்டும் அதிமுகவில் சேர முடிவெடுத்துவிட்டதாகக் கூறுகிறார்கள் அவருடைய வட்டாரத்தினர்.

2018ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி திமுகவுக்கு வரும்போது கரூர் சின்னசாமி அவரை முழு மனதோடு வரவேற்றார். ஆனால் செந்தில் பாலாஜிக்கு, எங்கே பழைய விஷயங்களை நினைவு வைத்துக்கொண்டு தனக்கு இடைஞ்சலாக இருப்பாரோ என சின்னசாமிமீது ஒரு சந்தேகம் இருந்தது. ஆனாலும் அதையெல்லாம் காட்டிக்கொள்ளாத செந்தில் பாலாஜி, ‘அண்ணே வர்ற எம்.பி எலெக்‌ஷன்ல நீங்கதான் கரூர் திமுக வேட்பாளராக நிப்பீங்க. நானே செலவு பண்ணி உங்களை ஜெயிக்க வெச்சு காட்டறேன்’ என்றெல்லாம் சொல்லியிருந்தார்.

இந்த நிலையில்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு திமுகவே போட்டியிட வேண்டுமென திமுகவில் பலரும் தலைமையிடம் வற்புறுத்தினர். தமிழ்நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலையும் அதன் அடிப்படையில் திமுக ஆதரவு அலையும் வீசிய தேர்தலில் கரூர் தொகுதிக்கு திமுக சார்பில் சின்னசாமிதான் வேட்பாளர் என்று பலத்த பேச்சு இருந்தது. ஏனெனில் 2014 தேர்தலிலும் சின்னசாமிதான் வேட்பாளர். ஆனால், 2019 எம்.பி தேர்தலில் கரூர் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு, ஜோதிமணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

எம்.பி தேர்தலில் சின்னசாமி வெற்றி பெற்றுவிட்டால் மாவட்டத்தில் மீண்டும் அவர் ஆதிக்கம் நிலவும் என்பதை உணர்ந்த செந்தில் பாலாஜி தொகுதியை காங்கிரஸுக்குத் தள்ளிவிட்டார் என்று தாமதமாகவே அறிந்து கொண்டார் சின்னசாமி. அப்போதிலிருந்தே, ‘எனக்குக் கீழே இருந்த பையன் என்னையே போட்டியா நினைச்சு துரோகம் பண்ணிட்டாரு’ என்று தன் வட்டாரத்தில் வெளிப்படையாகவே புலம்பிக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத் திமுகவுக்குள் புது மாதிரியான பழக்க வழக்கங்களைக் கொண்டுவருகிறார் என்று ஏற்கனவே இருந்த பல திமுக நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக செந்தில் பாலாஜிக்கு ஒத்துழைப்பு கொடுப்பதை அவர்கள் நிறுத்தினர். ‘மாவட்ட பொறுப்பாளரா இருக்கும் செந்தில்பாலாஜி நிர்வாகிகள் யார் போன் போட்டாலும் எடுப்பதில்லை. அவராகவே தொடர்புகொண்டால்தான் உண்டு. மாவட்ட அலுவலகத்துக்கும் வழக்கமாக வருவதில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்று யாருக்கும் தெரியாது.  எந்த நிர்வாகியையும் மதிப்பதில்லை. வைகோ பிரிந்தபோது கூட திமுகவை விட்டு வெளியேறாத திமுக நிர்வாகிகள், இப்போது செந்தில்பாலாஜியால் விரக்தி அடைந்து வெளியேறத் தயாராகிவிட்டார்கள்” என்கிறார்கள்.  இதைப் புரிந்துகொண்டுதான் தான் சொன்னதைக் கேட்கும் தனது பழைய நண்பர்களான அரவக்குறிச்சி சாகுல் ஹமீது உள்ளிட்டவர்களை மீண்டும் திமுகவுக்குக் கொண்டுவந்தார் செந்தில் பாலாஜி.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி மீது அதிருப்தியில் இருக்கும் பல திமுகவினர் வேறு வழியின்றி கரூர் சின்னசாமியை மையமாக வைத்து திரள தொடங்கினர்.

அதே நேரம் அதிமுகவில் கரூர் மாவட்டத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும், வரும் சட்டமன்றத் தேர்தலில் செந்தில் பாலாஜியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும், அது அமைச்சர் விஜயபாஸ்கரால் மட்டும் முடியாது என்ற எண்ண ஓட்டத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி தனது பழைய நண்பர்கள் மூலமாக கரூர் சின்னசாமியின் அதிருப்தியை அறிந்தார்.

உடனே அவருக்கு அதிமுகவில் இருந்து அழைப்பு சென்றது. முதலில் தயங்கினார் சின்னசாமி. ஆனால், சின்னசாமியின் தற்போதைய கடன் சுமைகளும் வரும் சட்டமன்றத் தேர்தலில் செந்தில் பாலாஜியை முறியடிக்க வேண்டும் என்ற முனைப்பும் மீண்டும் அவரை தாய் கழகத்துக்குத் திரும்பும் முடிவுக்குத் தள்ளியது என்கிறார்கள் சின்னசாமி வட்டாரத்தினர்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதி சின்னசாமிக்கு என்று உத்தரவாதம் அளிக்கப்பட்ட நிலையில் கரூர் வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட தனது அணியினரோடு அதிமுகவில் இணைய தயாராகிவிட்டார் சின்னசாமி.” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share