விஜய் நடித்த காவலன், கார்த்தி நடித்த சிறுத்தை 2011ஆம் ஆண்டு தீபாவளி அன்று நேருக்கு நேர் மோதியது. சிறுத்தை வெற்றிபெற்றது. 8 ஆண்டுகள் கழித்து இந்த வருட தீபாவளிக்கு விஐய் நடித்துள்ள பிகில் படத்துடன் நேரடியாக களம் கண்டது கார்த்தி நடித்து வெளியான கைதி.
ஆகஸ்டு மாதம் வெளியாகியிருக்க வேண்டிய கைதி, யாரும் யூகிக்க முடியாத சூழலில் தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது கண்டு தமிழ் சினிமா உலகம் அதிர்ந்து போனது. இது சம்பந்தமாக தயாரிப்பாளர் தரப்புடன் நாம் பேசியபோது பிகில் படத்திற்கு போட்டியாக கைதி என்று கூறலாமா? என்று கேட்டதற்கு ‘கைதி படத்திற்கு போட்டியாக பிகில் என்று கூட கூறலாம்’ என்றார்கள். தமிழகம் முழுவதும் திரையரங்குகளும், ஊடகங்களும் பிகில் படத்தை முன்னிலைப்படுத்தி செயல்பட்டு வந்த நேரம் கைதி கண்டு கொள்ளப்படாமலே இருந்தது.
தமிழகம் முழுவதும் சுமார் 16 கோடி ரூபாய் அளவு வியாபாரம் செய்யப்பட்ட கைதி படத்திற்கு, 300க்கும் குறைவான திரைகளே ஒதுக்கீடு செய்யப்பட்டது. சிறப்புக் காட்சி அனுமதி இல்லை; இரு மடங்கு டிக்கெட் கட்டணம் இல்லை.
அக்டோபர் 25 அன்று கைதி வெளியானபோது நகர்புறம் தவிர்த்து புறநகர் தியேட்டர்களில் காலை காட்சிக்கு போதுமான ஓப்பனிங் இல்லை. பிற்பகல் 3 மணி காட்சியிலிருந்து படத்தின் வசூல் அசுரவேகத்தில் உயரத் தொடங்கியிருக்கிறது. முதல் நாள் இரண்டு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் வசூலானது. இரண்டாம் நாள் 3 கோடியே 40 லட்ச ரூபாயாக உயரத் தொடங்கியது. நான்கு நாட்களில் தமிழகம் முழுமையும் கைதி படத்தின் மொத்த வசூல் 16 கோடி ரூபாய் என்கிறது தியேட்டர் வட்டாரம்.
சுமார் 40 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு 51 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. வெளியீட்டுக்கு முன்பே லாபக் கணக்கை தொடங்கியது. தற்போது திரையரங்குகளில் அனைத்துத் தரப்பினரின் ஆதரவோடு வெற்றிக் கோட்டினை கடந்து கரைபுரண்ட வெள்ளமாக கல்லாவை நிரப்பி வருகிறது கைதி திரைப்படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல்.
�,