காரைக்குடியில் “ஊத்தா” முறை மீன்பிடி திருவிழா!

Published On:

| By admin

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள விராமதி கிராமத்தில் நடந்த பாரம்பரிய முறைப்படி கையால் முடையப்பட்ட கூடையால் மட்டும் ஊத்தா முறையில் மீன் பிடிக்கும் திருவிழா நடைபெற்றது. காரைக்குடி மாவட்டம் அருகே உள்ள விராமதி கிராமத்தில், கண்மாய்களில் விவசாய தேவைக்கு தண்ணீர் பயன்படுத்திய பிறகு நீர் வற்றியதும் கிராமத்தில் மீன்பிடித் திருவிழா நடத்துவது வழக்கம். இதில் அருகில் இருக்கும் கிராம மக்களும் கலந்து கொண்டு ஒற்றுமையாக கிடைக்கும் கண்மாய் மீன்களை பிடித்து செல்வர்.

அந்த வகையில் பேய்கண்மாயில் தண்ணீர் வற்றிய நிலையில், கண்மாய் பராமரிப்பு மற்றும் கிராம பொது தேவைக்கு நிதி திரட்ட, ஒவ்வொரு வருடம் கோடை காலத்தில் பாரம்பரிய முறைப்படி அதாவது கையால் முடையப்பட்ட கூடையால் ‘ஊத்தா’ முறையில் மட்டும் மீன்பிடிக்க அனுமதி என கிராமத்தினர் அறிவித்தனர். இதனை தொடர்ந்து இன்று விராமதி, கீழச்சீவல்பட்டி, அழகாபுரி, நெல்லூர் குளத்துப்பட்டி, திருமயம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வருகை தந்த 1000க்கும் மேற்பட்டவர்களிடம் ‘ஊத்தா கூடை’ ஒன்றுக்கு ரூ.100 என வசூல் செய்து பிறகு அனைவரையும் ஒட்டு மொத்தமாக கண்மாயில் மீன் பிடிக்க அனுமதித்தனர்.

பங்கேற்க வந்தவர்கள் மீன் பிடிப்பதற்காக ‘ஊத்தா’ கூடைகளுடன் வேகமாக ஓடி சென்று கண்மாயில் இறங்கி ஊத்தா கூடையை நீரில் மூழ்கடித்து கூடைக்குள் சிக்கிய மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். இந்த முறையில் நடந்த மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு கட்லா, விரா, பொட்லா, ஜிலேப்பி, கெழுத்தி உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன. இந்த மீன்பிடி திருவிழாவை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வருகை தந்தவர்கள் கண்மாய் கரை சாலைகளில் இருந்து வேடிக்கை பார்த்து ரசித்தனர்.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share