காரைக்காலில் ஆண்டுதோறும் நடைபெறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று காலை முதல் தொடங்கியது. இதனால் காரைக்காலில் சுமார் 11 மீனவ கிராமத்தை சேர்ந்த சுமார் 11,000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின்படி, ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாகும். இந்த காலத்தில் மீன்களை பிடித்தால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும் என்பதால், மத்திய-மாநில அரசு இந்த 61 நாட்களில் ஆழ்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதித்துள்ளது.
அதன்படி, காரைக்கால் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரையிலான 11 மீனவ கிராமத்தில் உள்ள சுமார் 450 விசைப்படகிலிருந்து சுமார் 11 ஆயிரம் மீனவர்கள் இன்று காலை முதல் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. முன்னதாக, நேற்று மாலை முதல் கடலுக்கு சென்ற மீனவர்கள் பெரும்பாலோனோர் கரை திரும்பினர். இன்று முதல் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாத காரணத்தால், மீன்பிடி துறைமுகம் மற்றும் அரசலாற்றங்கரையில் விசைப்படகுகள் வரிசையாக கட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மீன்பிடி தடைக்காலம் குறித்து மீனவர்களிடம் பேசுகையில், “விலைவாசி உயர்வை கருத்தில்கொண்டு மீன்பிடி தடைக்கால நிவாரணம் இரு மடங்காக அதிகரித்து தரவேண்டும். அதேபோல், படகு பழுதுபார்ப்பு தொகையையும் இரட்டிப்பாக மாற்ற வேண்டும். டீசல் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பதால், மானிய விலையில் வரி இல்லாமல் டீசல் வழங்க, மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும்.” என்று கூறினர்.
மேலும், “மீன்பிடி துறைமுகம், கடந்த பல ஆண்டுகளாக முழுமையாக தூர்வாராமல் இருப்பதால், இந்த 2 மாத காலத்தில் மீன்பிடி துறைமுகத்தை முழுமையாக தூர்வார வேண்டும். துறைமுகம் உள்ளே மீனவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் போதே தடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.” என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.