eகண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா!

Published On:

| By admin

தமிழக – கேரள மாநில எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழா பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இன்று (ஏப்ரல் 16) நடக்கிறது.
தேனி மாவட்டம், கூடலூர் அருகே பளியன்குடி மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. தமிழக – கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள இந்தக் கோயில் சேர மன்னன் சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டது. பழமையான இந்தக் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் சித்ரா பவுர்ணமி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக, கேரள மாநில அதிகாரிகள் இணைந்து செய்து வருகின்றனர்.
பக்தர்களுக்கான பாதுகாப்பு மற்றும் உதவிகளுக்காக தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேரடி மேற்பார்வையில் சுமார் 400 போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். அதுபோல், வனத் துறையினரும் வனப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கேரள மாநிலம் சார்பிலும், போலீஸார் மற்றும் வனத் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
பக்தர்களை அழைத்து செல்வதற்கு குமுளி பஸ் நிலையத்தில் இருந்து ஜீப்கள் இயக்கப்படுகின்றன. மேலும், கூடலூர் அருகே பளியன்குடி மலைப்பகுதி வழியாக ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக செல்வது வழக்கம். பக்தர்கள் இன்று அதிகாலையில் பாத யாத்திரையை தொடங்குவார்கள் என்பதால் ஆங்காங்கே வனத் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதோடு, பக்தர்களோடு பாதுகாப்பாக பயணிக்கவும் வனத் துறை ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே மற்றும் அதிகாரிகள் நேற்று (ஏப்ரல் 15) கண்ணகி கோயிலுக்குச் சென்றனர். அங்கு கோயில் பகுதியில் இரண்டு ஆண்டுகளாக வளர்ந்திருந்த செடி, கொடி புதர்கள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ள பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிக்கான ஏற்பாடுகள் குறித்து அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.

**ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share