நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிட்டு, கனிமொழி வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தற்போதைய தெலங்கானா ஆளுநரும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் “கனிமொழியின் கணவர் மற்றும் மகன் சிங்கப்பூர் குடிமகன்கள். அவர்களின் வருமான விவரங்கள் பொருந்தாது என வேட்புமனுவில் கனிமொழி குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறு இருக்கும் சூழலில் சிங்கப்பூர் அரசு வழங்கிய குடிமக்கள் சான்றிதழ்களை கனிமொழி இணைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு இணைக்க வில்லை. அவரது வேட்பு மனு குறைபாடுடையது. எனவே அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் செப்டம்பர் 8 ஆம் தேதி தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் மாநில ஆளுநர்கள் நீதிமன்ற அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவர்களாக வரையறுக்கப்பட்டுள்ளனர். அதனால் ஆளுநராக இருந்துகொண்டு தேர்தல் வழக்கு நடத்துவது என்பது மரபு மீறிய நடைமுறையாகக் கருதப்படுகிறது. எனவே கனிமொழிக்கு எதிரான வழக்கை அவர் திரும்பப் பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி தொகுதி வாக்காளரான ஸ்ரீ வைகுண்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து மனுத் தாக்கல் செய்தார். கடந்த நவம்பர் 12-ஆம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் கனிமொழிக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதே போன்று சந்தானகுமார் என்ற வாக்காளரும் கனிமொழியின் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
சந்தானகுமார் தொடர்ந்த இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி கனிமொழி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த தேர்தல் வழக்கை விசாரித்த நீதிமன்றம் விரைவில் வழக்கை முடிக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்று இரு தரப்பினரையும் அறிவுறுத்தியது. இந்த நிலையில் வழக்கை நிராகரிக்கோரி கனிமொழி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு நாளை(நவம்பர் 19) வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
�,