காஞ்சிபுரம் வேளாண் துறை அலுவலகத்தில் பணிபுரிந்த மாற்றுத்திறனாளி பெண், அருகில் உள்ள வீட்டுக்கு இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது செப்டிக் டேங்கில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில் அரசு வேளாண்மை விரிவாக்க மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரியான சண்முகம் என்பவரின் இளைய மகள் சரண்யா கிடங்கு மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
அரசின் வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் கழிவறை இல்லாததால், அங்கு பணியாற்றும் பெண்கள் சிரமத்துக்கு ஆளாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், நேற்று அருகிலுள்ள வீட்டின் கழிவறைக்குச் சென்றிருக்கிறார் சரண்யா. அப்போது கழிவறை வெளியே அமைக்கப்பட்டிருந்த செப்டிக் டேங்க் மீது போடப்பட்டிருந்த, ஓட்டின் மீது சரண்யா கால் வைக்கும்போது அது உடைந்திருக்கிறது. இதனால் சரண்யா டேங்க் குழியில் 3 மணி அளவில் தவறி விழுந்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் சரண்யா வராததால், ஊழியர்கள் அவரை தேடி வரும்போது சரண்யாவின் காலணிகள் செப்டிக் டேங்க் அருகில் கிடந்துள்ளது. இதையடுத்து, 8 அடி ஆழம் கொண்ட அந்த செப்டிக் டேங்கில் மூழ்கி சரண்யா உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்துள்ளனர்.
அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்தார். அலுவலகத்தில் கழிவறை இல்லாததால் மற்றொரு வீட்டுக்குச் சென்ற நிலையில் சரண்யா பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
**-பிரியா**�,