காஞ்சிபுரத்தில் சானிடைசரை ஊற்றி தீ வைத்து விளையாடிய சிறுவர்களுக்குத் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவலைத் தொடர்ந்து, மக்கள் வாழ்க்கையில் சானிடைசர் பயன்பாடு அதிகரித்துவிட்டது. அதே சமயத்தில், சமையல் செய்யும்போதோ, விளக்கேற்றும்போதோ, நெருப்பு இருக்கும் பகுதிகளில் வேலை செய்யும்போதோ சானிடைசரை பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.
சானிடைசரில் உள்ள வேதிப்பொருட்கள் எளிதில் தீப்பற்றக் கூடியவை என்பதால் பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இந்த சூழலில் காஞ்சிபுரத்தில் சானிடைசரை வைத்து விளையாடிய சிறுவர்களுக்குத் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சிறு காவேரிப்பாக்கம் சாந்தி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவேல் பொற்செல்வி தம்பதியினர். இவர்களது மகன் பிரகாஷ் (11). ஆண்டாள் நகரைச் சேர்ந்த தாமோதரன் சத்யா தம்பதியினரின் மகன் முகுந்தன் (7). இரு சிறுவர்களும் ஜெயவேல் வீட்டருகே கட்டைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த கட்டையின் மேல் சானிடைசரை ஊற்றி தீ வைத்துள்ளனர். மளமளவெனப் பிடித்த தீ சிறுவர்களின் சட்டையிலும் பற்றியது. இதையடுத்து சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதில் முகுந்தனுக்குக் கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. பிரகாசுக்கு தோள்பட்டை மற்றும் இடது மார்பிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருவருக்கும் 18 சதவிகிதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் சிகிச்சைக்காகச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
**-பிரியா**�,