அமேசான் பங்குகள் சரிந்ததைத் தொடர்ந்து உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இரண்டாம் இடத்திற்கு சென்றுள்ளார்.
நிதியாண்டின் 3ஆவது காலாண்டில் அமேசானின் பங்குகள் 7 சதவிகிதம் வீழ்ச்சியை நேற்று (அக்டோபர் 24) சந்தித்தது. இதனால் அமேசான் பங்கில் 7 பில்லியன் அமெரிக்க டாலரை இழந்தார் ஜெஃப் பெசோஸ். இந்திய மதிப்பில் சுமார் ரூ. 50,000 கோடி. இந்த சரிவால் தற்போது, ஜெஃப் பெசோஸின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 103.9 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ.7.37 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு, 160 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துகளுடன் ஜெஃப் பெசோஸ், போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்தார். கடந்த 24 ஆண்டுகளாக உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்த மைக்ரோ சாஃப்ட்டின் இணை நிறுவனர் பில்கேட்ஸை இரண்டாம் இடத்திற்கு தள்ளி ஜெஃப் பெசோஸ் முதலிடத்துக்கு வந்தார்.
இந்நிலையில் அமேசான் பங்குகள் சரிவைத் தொடர்ந்து தற்போது பில்கேட்ஸ் மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளார். அவருடைய சொத்து மதிப்பு தற்போது 105.7 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 7.502 லட்சம் கோடி ஆகும்.
1998 முதல் அமேசான் நிறுவனர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வருகிறார். முதலில் 400 இடங்களுக்குள் இருந்த அவர் படிபடியாக முன்னேறி முதலிடத்துக்கு வந்தார். 2018ல் அவருடைய சொத்து மதிப்பு 160 பில்லியன் டாலராக இருந்தது. இந்திய மதிப்பில் ரூ.11.35 லட்சம் கோடி ஆகும். உலகிலேயே 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் சம்பாத்தித்தவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
�,