உள்ளாட்சித் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் பிறந்தநாள் இன்று (நவம்பர் 7) அவரது கட்சியினரால் கொண்டாடப்படவுள்ளது. இதே நாளில்தான் அவரது தந்தையும் விடுதலை போராட்ட வீரருமான டி.சீனிவாசன் மறைந்தார். இதையடுத்து, அவரது சிலை திறப்பு விழா கமல்ஹாசனின் சொந்த ஊரான பரமக்குடியில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதற்காக கமல்ஹாசன் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று மாலை மதுரை புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “எனது தந்தை உயிருடன் இருந்தபோது சிலை வைக்க வேண்டுமென விரும்பவில்லை. நாங்கள் செய்யும் பணிகள்தான் அவருக்குப் பிடித்தமானதாக இருந்திருக்கும். அவருடைய ரசிகன், மாணவன் என்ற முறையில் சிலை வைக்க விரும்பினேன். எனது கட்சியினரும் விரும்பினார்கள். அதனால் சிலை அமைக்கப்பட்டது. அதோடு, அங்கு திறன்வளர் மேம்பாட்டு பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்குகிறோம்” என்று தெரிவித்தார்.
கலை மற்றும் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு, “கலை என்பது என்னுடைய தொழில், அரசியல் என்பது எனது கடமை. என் மக்களுக்காக நான் செய்யும் கடமையாக இதைக் கருதுகிறேன்” என்று கருத்து தெரிவித்தார்.
திருவள்ளுவரை எல்லா மதத்தினரும் தனதாக்கிக்கொள்ள விரும்புகிறார்கள். திருவள்ளுவர் எந்த மதத்துக்கும் சொந்தமல்ல. அவர் ஒரு பொதுக்கருத்து என்பதுதான் உண்மை. அவருக்கு வண்ணம் பூசத் தேவையில்லை என்று குறிப்பிட்ட கமல்ஹாசன், “உள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்கள் தயாராகத்தான் உள்ளோம். அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன” என்றும் தெரிவித்துள்ளார்.�,