கமலா ஹாரிஸும்… பெசன்ட் நகர் வரசித்தி விநாயகரும்…

Published On:

| By Balaji

வரும் நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜியோ பிடன் போட்டியிடுகிறார்.

பெண் பராக் ஒபாமா என்றழைக்கப்படும் கமலா ஹாரிஸ், அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி இந்தியா உள்ளிட்ட நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

குறிப்பாக இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட, சென்னையைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதை ஒட்டி, ‘நம்ம ஊர்கார பொண்ணு’, அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதுதான் தற்போதைய பேசு பொருளாக இருக்கிறது.

தனது வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்த கமலா ஹாரிஸ், கடந்த 2011ல் கலிபோர்னியா அட்டர்னி ஜெனரலாக தேர்வு பெற்றார். இதன் மூலம் அந்த பதவிக்குத் தேர்வு பெற்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றார். 2017ல் கலிபோர்னியாவிலிருந்து செனட்டராக பதவியேற்றார். இந்நிலையில், தற்போது துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சென்னையை விட்டுச் சென்றாலும், கமலா ஹாரிஸின் மனதில் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள, வரசித்தி விநாயகர் கோயிலுக்கு எப்போதும் சிறப்பு இடம் உண்டு. ஏனென்றால், இக்கோயில் கட்டும்போது, அவரது, தாயார் சியாமளா கோபாலன் கோயில் கமிட்டியில் இடம்பெற்றிருக்கிறார். இதுமட்டுமின்றி, தனது ஒவ்வொரு வெற்றி முன்பாகவும், வரசித்தி விநாயகருக்குத் தேங்காய் உடைக்கச் சொல்வாராம் கமலா ஹாரிஸ்.

9ஆண்டுகளுக்கு முன்னதாக, அட்டர்னி ஜெனரல் தேர்தலுக்கு போட்டியிட்ட போது சென்னையில் உள்ள தனது சித்தி சரளா கோபாலனுக்குத் தொடர்பு கொண்ட கமலா ஹாரிஸ், “சித்தி எனக்காக வேண்டிக் கொண்டு, வரசித்தி விநாயகருக்கு தேங்காய் உடையுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

அதன்படி, அனைத்து தடைகளையும் கடந்து கமலா வெற்றி பெற வேண்டி, அவரது சித்தி சரளா கோயிலில் 108 தேங்காய் உடைத்துள்ளார். அந்த தேர்தலில் வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ், தனது சித்திக்கு தொடர்பு கொண்டு, “உங்களது வேண்டுதல் பலித்தது. ஒவ்வொரு தேங்காய் உடைப்புக்கும் எனக்கு 1000 வாக்கு கிடைத்தது” என்று கூறி மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருக்கிறார்.

(*சியாமளா கோபாலன், சரளா கோபாலன், கமலா ஹாரிஸ்*)

இந்த வெற்றியைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கமலா ஹாரிஸ், கலிபோர்னியாவின் செனட்டர் பதவிக்கு போட்டியிட்டார். அப்போது, சரளா கோபாலன், 108 தேங்காயை வரசித்தி விநாயகருக்கு உடைத்துள்ளார். அப்போதும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கு போட்டியிட்டுள்ள நிலையில் விநாயகருக்குத் தேங்காய் உடைக்க திட்டமிட்டிருக்கிறார் சரளா கோபாலன். இதுகுறித்து BusinessLine-னிடம் கூறுகையில், “நாங்கள் தற்போது பெசன்ட் நகரில் வசிக்கவில்லை என்றாலும், அங்குச் செல்லும் போது நிச்சயம் தேங்காய் உடைப்பேன்” என்று கூறியுள்ளார்.

கமலாவின் தாய் சியாமளா இளம் வயதிலேயே அமெரிக்கா சென்று விட்டார் என்று தெரிவித்துள்ள சரளா கோபாலன், “ சியாமளா முற்போக்கானவர். எது சரி, எது தவறு என்று குழந்தைகளுக்கு எப்போதும் சொல்லித் தருவார். தனது கனவு நனவாகும் வரை சியாமளா தொடர்ந்து பயணிப்பார். தற்போது அவரை போலவே கமலா ஹாரிஸும் உள்ளார். 2009ல் சியாமளா இறந்த போது, அவரது விருப்பப்படி அஸ்தியை வங்காளா விரிகுடாவில் கரைக்கச் சென்னை வந்தார் கமலா. தனது தாயின் குடும்பத்தினருடன் அவர் தொடர்பிலிருந்து வருகிறார். தென்னிந்திய உணவு வகைகளான வத்த குழம்பு மற்றும் எலுமிச்சை ரசம் கமலாவுக்கு மிகவும் பிடித்தமானது. விரும்பி சாப்பிடுவார். செனட்டர் பதவிக்குப் போட்டியிட்ட போது, ‘சித்தி இதோடு நிறுத்தப் போவதில்லை. தொடர்ந்து பயணிப்பேன்’ என்று கமலா கூறியதை நினைவு கூர்ந்துள்ளார் சரளா கோபாலன்.

**-கவிபிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share