தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தீபாவளிக்கு இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனை செய்யப்பட்டதாக கள் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு வழக்கமான நாட்களில் ரூ.60 முதல் ரூ.65 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது. பண்டிகை நாட்களில் இந்த வருமானம் 150 கோடியாக அதிகரித்தும் வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்த தகவலை [மதுவிற்பனைக்கு ரூ.360 கோடி இலக்கா?](https://minnambalam.com/k/2019/10/22/86/diwali-2019-liquor-Sales-target-tasmac-minister-reply) என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தோம்.
இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 27) கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில், “உலக அளவில் மதுவிலக்கு தோற்றுப்போய் இருந்தாலும், ஒரு அரசின் இலக்கு மதுவிலக்கை நோக்கியே இருக்க வேண்டும். அதற்கு மாறாக தமிழக அரசு தீபாவளி பண்டிகையை முன்னிறுத்தி, மது விற்பனை இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. இது தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும் தலைகுனிவாகும்.
மேலும், உணவின் ஒரு பகுதியான கள்ளுக்கு தடை விதித்து விட்டு, இறக்குமதி மதுக்களுக்கும், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுகளுக்கும் சிவப்பு கம்பளம் விரித்திருப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கும், உலகளாவிய நடைமுறைக்கும் மாறானது.
2020 ஜனவரி 21ஆம் தேதி முதல் கள் இறக்கும் போராட்டம் விரிவு படுத்தப்படும். பிகாரை பின்பற்றி தமிழ்நாட்டிலும் மதுவிலக்கு மற்றும் மதுக்கொள்கையை மாற்றியமைக்கப்பட வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
�,