கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபு அக்டோபர் 5ஆம் தேதி அதிகாலை தனது வீட்டிலேயே வைத்து திருமணத்தை நடத்தினார். ஒரு சட்டமன்ற உறுப்பினரின் திருமணம் எப்படி இருக்கும் என்று தமிழகம் அறியாததல்ல… செய்தித் தாள்களில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள், தான் சார்ந்த கட்சியின் உயர்தலைவர்கள் தலைமை வகிக்க, ஊரெங்கும் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்களில் விளம்பரங்கள் என்று எம்.எல்.ஏ.க்குத் திருமணம் என்றால் மிகக் கோலாகலமாகவே நடக்கும்.
இது கொரோனா சீசன் என்பதால் கோலாகலம் இருக்காது, இருக்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருதில்லை. ஆனால் எம்.எல்.ஏ.வின் திருமணம் அவர் சார்ந்த கட்சியின் முக்கியப் பிரமுகர்களுக்குத் தெரியாமல், அவரது ஊர் மக்களுக்குத் தெரியாமல், இவ்வளவு ஏன் கட்டிக்கொள்ளப் போகிற பெண்ணின் அப்பாவுக்குத் தெரியாமலேயே நடக்கும் என்பதை நம்ப முடிகிறதா?
அப்படித்தான் நடந்திருக்கிறது கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபுவின் திருமணம்.
அக்டோபர் 5ஆம் தேதி அதிகாலை 5.45 மணிக்குத் திருமணத்தை முடித்த கள்ளக்குறிச்சி பிரபு எம்.எல்.ஏ.வின் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றார், மணப்பெண் சௌந்தர்யாவின் தந்தையான கோயில் குருக்கள் சுவாமிநாதன்.
பிரபு தன் மகளைக் கடத்திவிட்டதாகவும், காதல் என்று ஆசை வார்த்தை காட்டி அந்தப் பெண்ணை மோசம் செய்துவிட்டதாகவும் போலீஸாரிடம் சுவாமிநாதன் கொடுத்த புகாருக்கு மதிப்பில்லாததால் தனது மகளை தன் கண்முன்னே கொண்டுவந்து காட்டும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்ப்பஸ் (ஆட்கொணர்வு) தாக்கல் செய்திருக்கிறார் சுவாமிநாதன். அந்த மனு இன்று (அக்டோபர் 7) காலை 11 மணியளவில் விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே எம்.எல்.ஏ. பிரபு அக்டோபர் 5ஆம் தேதியே ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் அருகே சௌந்தர்யா அமர்ந்திருக்க பிரபு, “நான் சௌந்தர்யாவைக் கடத்திவிட்டதாகவும்,கொலை மிரட்டல் விட்டதாகவும், வற்புறுத்தி திருமணம் செய்ததாகவும் வதந்திகள் பரவுகின்றன. நாங்க ரெண்டு பேரும் கடந்த இரண்டு மாதமா லவ் பண்ணிக்கிட்டிருந்தோம். அவங்க வீட்ல போய் பொண்ணு கேட்டோம், தர மறுத்தாங்க. அதன் பின் நாங்க ரெண்டு பேரும் எங்க அப்பா அம்மா சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கோம். இவங்க வீட்டை மிரட்டியோ, ஆசை வார்த்தை காட்டியோ கல்யாணம் பண்ணிக்கலை. நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்” என்று அந்த வீடியோவில் பேசுகிறார் பிரபு. ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய திருமணம் பற்றி ஒரு பத்திரிகையாளர் சந்திப்புகூட வைக்க முடியாமல் வீடியோ வடிவில் விளக்கம் வெளியிடப்பட வேண்டிய நிலையில் இருக்கிறார்.
இதன்பின் நாம் மணப்பெண் சௌந்தர்யாவின் தந்தை சுவாமிநாதனிடம் பேசினோம்.
“நான் தியாகதுருகம் மலையம்மன் கோயிலில் அர்ச்சகரா இருக்கேன். அந்தக் கோயிலுக்கு கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு பல வருஷமா வந்து போகிறவர். எனக்கும் 15 வருஷப் பழக்கம். என்னை அப்பா அப்பானு கூப்பிடுவாரு, என் மனைவியை அம்மானு கூப்பிடுவாரு. என் பசங்கள தம்பி, தங்கச்சினுதான் கூப்பிடுவாரு. இவ்வளவு பழகிட்டு என் மகளையே எனக்குத் தெரியாமல் கல்யாணம் பண்ணிக்கிட்டது உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ண மாதிரி.
பிரபுவைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். அதனாலதான் என் பொண்ணைக் கொடுக்க பயப்படுறேன். ஏற்கனவே 2007ஆம் ஆண்டு அவர் எஸ்.ஆர்.எம். கல்லூரியில படிச்சப்ப அவர் ஒரு அந்தமான் பெண்ணை காதலிச்சு திருமணம் செஞ்சுக்கிட்டாரு. கள்ளக்குறிச்சியிலதான் வச்சிருந்தாரு. என்கிட்ட அப்ப, ‘அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி ஒன்றரை மாசம் இருந்தோம். சண்டை வந்துருச்சு. நான் கோபத்துல அந்த பொண்ணை கன்னாபின்னானு அடிச்சிட்டேன். அந்தப் பொண்ணு தாலிய தூக்கிப் போட்டுட்டு போயிருச்சு’ன்னு என்கிட்ட பிரபு சொன்னாரு. இன்னொரு லோக்கல் சம்பவமும் பெண் விவகாரத்துல நடந்துச்சு. அவங்க அப்பா பத்து லட்சம் ரூபா கொடுத்து கணக்கு தீர்த்துவிட்டாரு. அதுவும் தெரியும். அதான் நான் ஆதங்கப்படுறேன். இனியாவது ஒழுக்கமா இருந்தா சரி.
நான் ஒரு கோயில் குருக்கள். எனக்குத் தெரிஞ்சு தாறுமாறா போறவங்களை திருத்தணும்னு நெனைப்போம். குடிக்காதீங்க, பெண்கள் விஷயமெல்லாம் வேணாங்க, விரயச் செலவுல்லாம் பண்ணாதீங்க. குடும்பத்துல ஒருத்தருக்கொருத்தர் சண்டை போடாம ஒத்துமையா இருங்கனு அறிவுரைகளைக் கோயிலுக்கு வர்றவங்களுக்கு அறிவுரைகள் வழங்குவோமில்லையா… அதுபோலத்தான் எனக்கு பிரபுவும் நெருக்கமானாரு. அவரும் என் பேச்சைக் கேட்டு திருந்தினாரு. ஆனா, வரம் கொடுத்தவன் தலையிலயே கை வச்சமாதிரி என் பெண்ணையே இப்படி பண்ணிட்டாரு. என் ஆதங்கம் திருமணம் பண்ணிக்கிட்டாரேங்கறதை விட உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணிட்டாரேங்கறதுதான்.
அக்டோபர் 1ஆம் தேதி மாலை 3.50 இலிருந்து என் பொண்ணைக் காணல சார். எல்லா இடத்துலயும் தேடினோம். ஏழு மணிக்கு எம்.எல்.ஏ. பிரபுகிட்ட போன் பண்ணி சொன்னேன். ‘நான் தான் கூட்டிக்கிட்டு வந்தேன்னு சொன்னாப்ல. வீட்லயே கொண்டு வந்து விட்ருப்பானு சொன்னேன். அவர் கேக்கலை. உடனே எம்.எல்.ஏ.வோட அப்பாகிட்டயும் பேசினேன். பொண்ணை கொண்டு வந்து விட்டுருங்க. அவ காலேஜ் படிப்பை முடிக்கட்டும். அதுக்குப் பிறகு நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னேன். அவங்க கேக்கலை. அமமுக கோமுகி மணியன், இதைப் பத்தி போலீசுக்கு போனா கொலை பண்ணிடறதா மிரட்டினாரு. அவருடைய மிரட்டலுக்கு பயந்துதான் நான் போலீஸுக்குப் புகார் கொடுக்க முடியலை.
இப்ப வரைக்கும் என் பொண்ணுக்கிட்ட நான் பேசலை. பிரபு எம்.எல்.ஏ.கிட்டதான் பேசினேன்.‘அப்பா அப்பானு கூப்பிட்டியே… தாயா புள்ளயா பழகிட்டு இப்படி பண்றியேனு கேட்டேன். எல்லா பொண்ணுங்களையும் தாயா புள்ளயா பாத்தா எப்படி புள்ளை பெத்துக்கறதுனு கேட்குறாரு. அம்மா மட்டும் ஆட்சியில இருந்திருந்தாங்கன்னா இவங்களுக்கு தொகுதிய பாக்கவே நேரம் இருந்திருக்காது. இந்த வேலையெல்லாம் எப்படி பார்ப்பாங்க” என்று அங்கலாய்த்துக் கொண்டார் சுவாமிநாத குருக்கள்.
இந்த நிலையில் அவர் மகள் சௌந்தர்யா நேற்று (அக்டோபர் 6) ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், “என்னை யாரும் கடத்தலை. என் முழு சம்மதத்தோடுதான் கல்யாணம் நடந்தது” என்று சொல்லியிருக்கிறார்.
இதைப் பார்த்துவிட்டு மீண்டும் குருக்கள் சுவாமிநாதனிடம் நாம் தொடர்புகொண்டு, “உங்க பொண்ணு இப்படி சொல்றாங்களே?” என்று கேட்டோம்.
“கிளியைப் பிடிச்சு கூண்டுல அடைச்சு வச்சா அது சொல்லிக்கொடுக்குறவங்க சொல்றதைதானே சார் சொல்லும்?” என்று நம்மையே திருப்பிக் கேட்டார்.
இன்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையைப் பொறுத்தே இந்த விவகாரத்தின் அடுத்த கட்டம் அமையும்.
**ஆரா**�,”