தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தனது திருமணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடை பெற இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் காஜல்.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் காஜல் அகர்வால், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
சமீபத்தில் காஜல் அகர்வாலுக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிச்சயதார்த்ததில் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால் இதுகுறித்து காஜல் அகர்வால் அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது காஜல் அகர்வாலுக்கும் கவுதமுக்கும் அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறவுள்ளதாக தனது சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளார்.
அவர் அதில், “வருகிற அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் எனது திருமணம் நடைபெற உள்ளது. தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவருடன் நடக்கவிருக்கும் இந்தத் திருமணத்தில் இருவீட்டாரின் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருமணத்தை எளிய முறையில் நடத்த உள்ளோம். மேலும் எனக்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இத்தனை ஆண்டுக்காலம் திரைத்துறையில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. திருமணத்துக்கு பின்னரும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தொடர்ந்து நடிப்பேன்” என காஜல் அகர்வால் அதில் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் காஜல் அகர்வாலுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
**-ராஜ்**�,