�
ரிலாக்ஸ் டைமில், ஸ்நாக்ஸ் என்ற பெயரில் ஜங்க் ஃபுட், பாக்கெட் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் வேண்டவே வேண்டாம். முடிந்தவரை வீட்டில் செய்த ஸ்நாக்ஸைப் பயன்படுத்தலாம். வெளியிடங்களில் செய்யப்பட்ட ஸ்நாக்ஸ் வகைகள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டவையா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. மேலும், அவர்கள் பயன்படுத்தும் எண்ணெய்களின் தரம் பற்றியும் நமக்குத் தெரியாது. சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் ஸ்நாக்ஸ் வகைகளும் அதிக உப்பு மற்றும் அதிகக் காரம் கொண்ட உணவுகளும் உடல் நலனைப் பாதிக்கும். குழந்தைகள் தவறான ஸ்நாக்ஸ் வகைகளைச் சாப்பிடுவதால் சத்தான உணவுகளைத் தவிர்ப்பதோடு, ஹைபர் ஆக்டிவ் ஆகவோ, சோர்வடையவோ வாய்ப்புகள் உள்ளன. அதைத் தவிர்க்க இந்த கடலை உருண்டையை வீட்டிலேயே செய்து தரலாம்.
**எப்படிச் செய்வது?**
பாத்திரத்தில் அரை கப் வெல்லத்தூள் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி, கொதிக்கவைத்து வடிகட்டவும். வெல்லக்கரைசலை மீண்டும் அடுப்பிலேற்றி உருட்டுப் பாகு பதம் வரும் வரைக் காய்ச்சவும். இதனுடன் ஒரு கப் வேர்க்கடலை சேர்த்துப் புரட்டி, வேறு பாத்திரத்துக்கு மாற்றவும். சற்று ஆறியதும் கையில் நெய் தடவிக்கொண்டு, கலவையைச் சிறிய உருண்டைகளாக்கவும்.
**சிறப்பு**
பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. வேர்க்கடலையில்தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துகள் உள்ளன என்பது ஆய்வுகள் தரும் முடிவு. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் வேர்க்கடலைக்கு உண்டு.�,