தர்பார் இசை வெளியீடு நிகழ்ச்சியில் பரபரப்பாகப் பேசியதிலிருந்தே, சோஷியல் மீடியா முதல் நியூஸ் மீடியா வரை தென்பட்டு வருகிறது ராகவா லாரன்ஸின் பெயர். இந்த நிலையில் அவரிடமிருந்து ஓர் அறிவிப்பு வெளியாகிறதென்றால் சாதாரணமாக இருக்குமா? அதற்கான எதிர்பார்ப்பும், ரியாக்ஷனும் அதிகமாகவே இருக்கிறது.
ராகவா லாரன்ஸின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், ‘தர்பார் இசை வெளியீட்டுக்குப் பிறகு என்னை பல ஊடக நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி கேட்கின்றனர். தற்போது நான் இந்தி படப்பிடிப்பில் சற்று பிசியாக இருப்பதால், தற்சமயம் என்னால் பேட்டி எதுவும் கொடுக்க இயலாது. ஆனால், எனது படப்பிடிப்பு முடிந்ததும் நான் வந்து அனைவருக்கும் தனித்தனியாகப் பேட்டி கொடுப்பேன். நீங்கள் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும், பொதுவான சில விஷயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று லாரன்ஸ் தொடங்குகிறார்.
சோஷியல் மீடியா தளத்தில் அவரது கருத்துகளுக்குப் பதிவு செய்யப்படும் கமென்டிலேயே, ‘தலைவன் சொல்றதை சரியா சொல்ற ஒரே ஆள் நீதான் தலைவா’ என்று லாரன்ஸின் பேச்சுக்கும், ரஜினிக்கும் அவரது ரசிகர்கள் சிலர் முடிச்சிடுகின்றனர். இதை விளக்கும் விதத்தில், “நான் பதிவிடும் ட்வீட்டுகள், நான் பேசிய பேச்சு மற்றும் இனிமேல் நான் பேசப்போகும் விஷயங்கள் அனைத்தும் எனது சொந்த கருத்துகள் மட்டுமே. என்னுடைய கருத்துகளுக்கு தலைவர் சூப்பர் ஸ்டார் எவ்வகையிலும் பொறுப்பல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரஜினி சார் சொல்லித்தான் நான் பேசுவதாகச் சிலர் சொல்லுவது உண்மையற்றது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்கிறார். அதாவது, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கிண்டலடித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக லாரன்ஸ் பேசியது ரஜினி சொன்னதால்தான் என்று முன்வைக்கப்படும் கருத்துகளில் உண்மை இல்லை என்கிறார் லாரன்ஸ்.
அடுத்து, “அவர் பேச விரும்பினால், அவரே பேசுவார். ஒருவரைத் தூண்டிவிட்டு பேச வைக்ககூடிய நபர் அல்ல அவர். என்னால் அவருக்கு எந்த பாதிப்பும் வேண்டாம். நான் அவருடைய ரசிகனாக அவரிடம் எதிர்பார்ப்பது அவருடைய ஆசீர்வாதமும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது மட்டுமேதான்” என்று ரஜினியின் பிறந்த நாள் விழா மேடையில் பேசியதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் லாரன்ஸ்.
தர்பார் திரைப்படத்துக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லாத ராகவா லாரன்ஸ் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற தர்பார் இசை வெளியீட்டு விழா மேடையில் ஏற்றப்படுகிறார். அங்கு அவர் பேசிய பேச்சு, ‘ரஜினியின் அரசியல் பிரவேசத்தைத் தள்ளிப்போட்டவர்’ என்று சொல்லக்கூடிய கமலை பற்றி விமர்சித்ததாக ரசிகர்களால் பேசப்பட்டது. இதே பேச்சை ரஜினியின் பிறந்தநாள் விழாவுக்கான மேடையில் லாரன்ஸ் பேசியிருந்தால், ரசிகர்கள் அப்படி நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால், அந்த மேடையிலும் லாரன்ஸ் பேசினார். ஆனால், அங்கு வேறு ஒருவரைப் பற்றிப் பேசினார்.
“நான் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானவன் அல்ல. நான் யாரையும் ஆதரிக்கவில்லை. நான் எனது சேவையைச் செய்கிறேன். தேவைப்படும்போதெல்லாம் எனது குழந்தைகளுக்கான உதவி கேட்பேன். இதைத் தவிர அவர்கள் உதவி செய்தால் எனது நன்றியைத் தெரிவிப்பேன். எனக்கு அரசியலில் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நான் தேவையின்றி ஒரு பிரச்சினையில் இழுத்துச் செல்லப்பட்டேன். இதன் காரணமாக எனக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் கருத்து வேறுபாடும், சர்ச்சைகளும் எழுந்தன. எனவே நான் பேச வேண்டிய ஒரு நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டேன். எனது பிறந்த இடம், மொழி மற்றும் எனது சேவை குறித்து அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு நான் சாந்தமாகப் பதிலளிப்பேன். ஜல்லிக்கட்டு சமயத்திலிருந்தே நான் சாந்தமாகவே பதில் சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதைத் தொடர்ந்து என்னால் முடிந்த அளவில் அவர்களுக்கு சாந்தமாகப் புரியவைக்க முயற்சி செய்வேன்” என்று கூறியிருக்கிறார் லாரன்ஸ்.
டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பேசும் ராகவா லாரன்ஸ், ரஜினியின் அரசியல் பிரவேசத்தைக் கிண்டலடித்து வரும் சீமானுக்கு எதிராகப் பேசுகிறார் என்று அவரது ரசிகர்களே சொல்லுமளவுக்குப் பேசுகிறார். சீமானுக்கு எதிராக ஏன் லாரன்ஸ் என்ற கேள்விக்குப் பதிலாக சீமான் தரப்புடன் ஏற்கனவே ஏற்பட்ட ஒரு மோதல் இருக்கிறது.
ஜல்லிக்கட்டு பிரச்சினையின்போது அமைதியாகப் போராடிக்கொண்டிருந்த இளைஞர்களைச் சந்தித்துவிட்டு வெளியேறிய ராகவா லாரன்ஸ், ஹி ஹாப் ஆதி போன்றவர்கள் ‘தீய சக்திகள் உள்ளே நுழைந்துவிட்டனர்’ என்று வீடியோ வெளியிட்டு அந்தப் போராட்டத்துக்கு வேறு நிறம் கொடுத்தது யாராலும் மறக்கமுடியாதது. அப்போது ராகவா லாரன்ஸைக் கிண்டலடிக்கத் தொடங்கினர் நாம் தமிழர் கட்சியினர். இதற்கு ரியாக்ட் செய்யும் விதத்தில் அப்போது லாரன்ஸும் பேசினார். எனவே, அந்த மோதலை மனத்தில் வைத்துக்கொண்டே ராகவா லாரன்ஸை ரஜினி பயன்படுத்திக்கொண்டார் என்று சொல்லப்பட்டது. இதை மறுக்கும் விதத்திலேயே, ‘என்னுடன் பிரச்சினை செய்தவர்களுக்கு நான் சாந்தமாகவே பதிலளிக்கிறேன். அளிப்பேன்’ என்று லாரன்ஸ் கடிதத்தின் மூலம் விளக்கியிருக்கிறார்.�,”