கச்சத்தீவு திருவிழா: தமிழக மீனவர்கள் உற்சாக பயணம்!

public

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்கள் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இன்று காலை படகுகளில் புறப்பட்டனர்.

இந்திய இலங்கை இடையே கடல் எல்லையான கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கச்சத் தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நடப்பது வழக்கம். இதில் இந்திய-இலங்கை பக்தர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள். கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவலால் இந்த திருவிழாவில் பக்தர்கள் அதிகமாக கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.

இந்தாண்டு மார்ச் 11 மற்றும் 12 ஆம் தேதியில் திருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திருவிழாவில் இலங்கையைச் சேர்ந்த 500 பேரை மட்டும் அனுமதிப்பது என அந்நாட்டு அரசு முடிவெடுத்தது. கடந்த ஆண்டுபோல் இந்தாண்டும் கொரோனாவை காரணம் காட்டி திருவிழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திரப் பெருவிழாவில் தமிழக மீனவர்கள் தடையின்றி பங்கேற்பதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசுக்கு வலியுறுத்தக் கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.

இதன் பயனாக கச்சத் தீவு திருவிழாவில் பங்கேற்க இந்திய மீனவர்கள் 80 பேர் கலந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி வழங்கியது.

கச்சத்தீவு திருவிழா இன்று(மார்ச் 11) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள நிலையில், காலையில் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து மூன்று படகுகள் மற்றும் ஒரு நாட்டு படகில் 80 மீனவர்கள் உற்சாகத்துடன் புறப்பட்டனர்.

இதற்கான ஏற்பாட்டை சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மற்றும் ராமேஸ்வரம் வேர்க்காடு பகுதியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை ஆகியோர் செய்தனர்.

படகுகளில் ஏறுவதற்கு முன்பு இந்திய கடற்படை அதிகாரிகள் மற்றும் போலீசார், வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 4 அடுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் உடைமைகள், பரிசோதனை சான்று, அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்தனர்.

பின்னர் பாதுகாப்பு கவச உடை அணிந்தபின் மீனவர்கள் படகுகளில் ஏற்றப்பட்டனர். இன்று பிற்பகல் இவர்கள் கச்சத்தீவுக்கு சென்றடைவார்கள். அதன்பின் அங்கு நடக்கும் திருப்பலி, தேர்பவனி, கூட்டுப்பிரார்த்தனை ஆகியவற்றில் பங்கேற்று விட்டு நாளை மாலை அல்லது இரவுக்குள் நாடு திரும்புவார்கள்.

இன்று மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கும் திருவிழா, நாளை காலையில் இந்தியா இலங்கை பங்கு தந்தைகளின் கூட்டு திருப்பலியுடன் திருவிழா நிறைவடையும்.

**-வினிதா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *