சத்குரு ஜகி வாசுதேவ்
கபீர் ஒரு நெசவுத் தொழிலாளியாக இருந்தார் – ஒரு மகத்தான மறைஞானக் கவிஞராக, அவரது பல்வேறு கவிதைகள் வாயிலாக இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் எழுதிய அல்லது பாடிய கவிதைகள் அவரது வாழ்க்கையின் ஒரு சிறு பகுதிதான் பெரும்பாலான நேரம் அவர் ஒரு நெசவாளியாகப் பணிபுரிந்தார். அவரது கவிதைகள் மட்டும் இங்கு இருப்பதால், அவர் செய்ததெல்லாம் இது மட்டும்தான் என்று மக்கள் எண்ணுகின்றனர்.
அவரது வாழ்க்கை நெசவோடு பின்னப்பட்டிருந்தது, கவிதையோடு அல்ல. அவர் நெய்த துணி இப்போது இல்லை, ஆனால் அவரின் கவிதை அல்லது வரிகள் இன்னமும் வாழ்கின்றது. எத்தனை கவிதைகள் காணாமல் போயுள்ளன என்பது நமக்குத் தெரியவில்லை, ஆனால் எஞ்சியிருப்பதென்னவோ இன்றளவும் பிரமிக்கத்தக்கவாறு இருக்கிறது.
அவ்வளவு அற்புதமான ஒரு மனிதராக இருந்தாலும், அவரது கவிதையைத் தவிர்த்து நமக்கு அவரைப்பற்றி அதிகம் தெரியவில்லை. அவர் ஆழ்ந்த உள் அனுபவம் மிக்க ஒருவராக இருந்தார் என்பதில் கேள்வியே இல்லை. ஆனால் அவரது வாழ்க்கை முழுவதும், அவரது மரணம் வரையிலும் மற்றும் அதற்குப் பிறகும்கூட, அவரது ஆழ்ந்த ஞானம், அவரது அறிதல் அல்லது அவர் உலகிற்கு வழங்க விரும்பிய தெளிவின் புதிய பார்வை – இவை எதுவும் மக்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை.
மக்களின் கவனமெல்லாம் அவர் ஒரு இந்துவா அல்லது இஸ்லாமியரா என்பதில்தான் இருந்தது. இது முக்கியமான கேள்வியாக எழுந்தது. ஒருவேளை உங்களுக்குத் தெரியவில்லை என்றால், நான் சில முக்கியமான தகவலை உங்களுக்குக் கொடுக்கிறேன்: எவரும் ஒரு இந்துவாக அல்லது ஒரு இஸ்லாமியராக அல்லது மற்ற எந்த ஒரு முட்டாள்தனத்துடன் பிறப்பதில்லை. மற்றும் எவர் ஒருவரும் ஒரு இந்துவாக அல்லது ஒரு இஸ்லாமியராக அல்லது வேறெதுவாகவும் இறப்பதுமில்லை. ஆனால், நாம் இங்கு இருக்கும்போது, ஒரு பெரிய சமூக நாடகம் நடந்துகொண்டே இருக்கிறது.
நீங்கள் உருவாக்கிய ஒவ்வொன்றும் – நீங்கள் யார் என்பதைப் பற்றிய உங்களது கருத்துக்கள். நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர், எது உங்களுடையது, எது உங்களுடையது கிடையாது – இவையாவும் உண்மையல்ல. உண்மை இருக்கிறது, அவ்வளவுதான்; அதைப்பற்றி நீங்கள் எதுவும் செய்யவேண்டியதில்லை. இந்த உண்மையின் மடியில்தான் நாம் அனைவரும் வாழ்கிறோம். உண்மை என்பது நீங்கள் பேசுவதில் இல்லை. உண்மை என்பது, இந்த உயிரையும் மற்றும் எல்லாவற்றையும் நிகழச் செய்யும் அடிப்படையான பிரபஞ்ச விதிகளைக் குறிக்கிறது. அதனுடன் நீங்கள் இசைவாக இருக்கிறீர்களா அல்லது இசைவில்லாமல் இருக்கிறீர்களா என்பதுதான் உங்களது தேர்வுக்கு உட்பட்டது. நீங்கள் உண்மையை கண்டுபிடிக்கத் தேவையில்லை. நீங்கள் உண்மையை ஆராய வேண்டியதில்லை. சொர்க்கத்திலிருந்து அதை நீங்கள் கீழே கொண்டுவர வேண்டியதில்லை.
ஒரு மரம் வளர்ந்து, பூத்து நிற்கிறது என்றால், அது உயிர்த்திருக்கத் தேவையான ஆதாரப்பொருட்கள் அனைத்தும் இங்கே உள்ளன – அதனால்தான் அது தழைத்திருக்கிறது. நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் என்றால், அதன் பொருள் இந்த உயிர் நிகழ்வதற்குத் தேவையான அனைத்தும் இங்கு இருக்கிறது. இல்லையென்றால் நீங்கள் இங்கு இருக்கமாட்டீர்கள். இந்த சக்திகளுடன் நீங்கள் இசைவோடு இருக்கிறீர்களா அல்லது அதற்கு நீங்கள் எதிர்ப்புடன் இருக்கிறீர்களா? என்பதுதான் கேள்வி.
“அட, வாழ்வை நிகழ்த்தும் சக்திகளுடன் நான் ஏன் எதிர்ப்பாக இருக்கப்போகிறேன்?” என்று கூறுகிறீர்களா? நல்லது. ஆனால் நீங்கள் அல்லாத ஏதோ ஒன்றாக நீங்கள் இருக்கிறீர்கள் என்று நம்பத் தொடங்கும் கணத்திலேயே, நீங்கள் பிரபஞ்ச சக்திக்கு எதிராக இருக்கிறீர்கள். நீங்கள் மதப்பற்றுடையவர் என்று நீங்களாக எண்ணிக்கொள்ளலாம், ஆனால் இங்கே நிகழ்ந்துகொண்டிருப்பதெல்லாம், நீங்கள் மிக மோசமாகக் குழப்பப்பட்டிருக்கிறீர்கள்: நீங்கள் ஒரு உளவியல் நாடகத்தை உருவாக்கிக்கொண்டு, பிரபஞ்ச நாடகத்தை முற்றிலுமாக மறைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். படைப்பாளியின் படைப்பை நீங்கள் முழுவதும் தவறவிடுகிறீர்கள். ஏனென்றால், உங்களுக்கே உரிய அற்பமான படைப்பு உங்கள் தலைக்குள் இருந்துகொண்டு உங்களை எப்போதும் ஆட்டி வைத்துக்கொண்டிருக்கிறது.
ஞானமடைதல் – அறியாமையின் ஒரு கொண்டாட்டம்;
“ எனக்குத் தெரியவில்லை”, என்பதை நீங்கள் உணரும்போதுதான் நீங்கள் உண்மையை நோக்கி நகரத் தொடங்குவீர்கள். உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நினைத்தால், உண்மையல்லாததை நோக்கி நீங்கள் நகரத் தொடங்குவீர்கள்.
ஏனென்றால், “எனக்குத் தெரியும்” என்பது ஒரு எண்ணம்தான்; “எனக்குத் தெரியவில்லை” என்பது நிதர்சனமானது. இதை எவ்வளவு விரைவில் நீங்கள் புரிந்துகொள்கிறீர்களோ, அவ்வளவு மேலானது உங்களுக்குத் தெரியவில்லை என்பதுதான் உங்களது வாழ்க்கையின் மிகப்பெரிய உணர்தல். “எனக்குத் தெரியாது” என்பது ஒரு மகத்தான வாய்ப்பு. “எனக்குத் தெரியாது” என்று நீங்கள் பார்க்கும்போதுதான், அறிந்துகொள்வதற்கான ஆவலும், தேடலும் மற்றும் அறிதலுக்கான சாத்தியமும் நிகழக்கூடிய ஒன்றாகிறது.
.
இந்தக் கலாச்சாரத்தில் எப்போதும் நாம் அறியாமையுடன் அடையாளம் கொண்டோம். ஏனென்றால், நமது அறிவு மிகச்சிறியது – நாம் எவ்வளவு அறிந்திருந்தாலும் அது ஒன்றுமில்லை – ஆனால் நமது அறியாமை எல்லையற்றது. ஆகவே, உங்களது அறியாமையுடன் நீங்கள் அடையாளம் கொண்டால், ஏதோ ஒருவிதத்தில் நீங்கள் எல்லையற்றவராகிறீர்கள். ஏனெனில், நீங்கள் எதனுடன் அடையாளம் கொள்கிறீர்களோ அதுவே உங்கள் தன்மை ஆகுகிறது. ஒரு வழியில், ஞானமடைவது என்பது அறியாமையின், ஆனந்தமயமான அறியாமையின் ஒரு கொண்டாட்டமாக இருக்கிறது. அறிந்ததுடன் நீங்கள் குழப்பம் கொள்ளவில்லை.
ஆகவே, எல்லாவற்றையும் அது எப்படி இருக்கிறதோ அந்த விதமாகவே நீங்கள் பார்க்கிறீர்கள், அவ்வளவுதான். நீங்கள் அறிந்ததுடன் குழப்பம் கொண்டால், எதையும் அது உள்ளபடியே நீங்கள் பார்ப்பதில்லை; எல்லாவற்றையும் குறித்து நீங்கள் முன்முடிவுடன் இருக்கிறீர்கள்.
ஆகவே, கபீர் ஒரு ஞானமடைந்த நெசவாளியாக, ஒரு மறைஞானியாக இருந்தார். ஞானம் என்பது எங்கேயோ கடந்த காலத்தில், நீங்கள் வாசிக்கும் சில கவிதைகளில் இருக்கும் ஒரு தனிமனிதருடன் இருக்கக்கூடாது. ஞானம் என்றால், தினமும் வாழ்வின் புதியதொரு வட்டத்திற்குள் நீங்கள் அடியெடுத்து வைக்கிறீர்கள்.
புதியதாக, நீங்கள் அறிந்திராத ஏதோ ஒன்று இன்று உங்கள் அனுபவத்துக்குள் வந்துள்ளது. மறைஞானம் என்றால், சேகரித்துத் திரட்டிய அறிவைக் குறிப்பதல்ல; அது ஒரு தேடல். நீங்கள் நம்பிக்கை வைத்தால், எதையும் தேடமாட்டீர்கள். உங்களுக்குத் தெரியவில்லை என்பதை நீங்கள் அறியும்போதுதான் இயல்பாகவே உங்களால் தேடமுடியும்.
**
மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்….
**
[60ஆம் கல்யாணம் எதற்காக?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/public/2020/02/29/10/Why%20the%2060th%20wedding%3F)�,”