k24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம்: சாஹூ

Published On:

| By Balaji

வாக்குப்பதிவு இயந்திர மையங்களில் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர்கள் இருக்கலாம் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருக்கிறார்.

மதுரை மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்தில் நுழைந்து ஆவணங்களை எடுத்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாகக் கலால் வரி வட்டாட்சியர் சம்பூரணம் நேற்று முன்தினம் (ஏப்ரல் 21) பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவ்விவகாரத்தில், சம்பூரணத்துக்கு உதவியாக இருந்ததாகக் கூறி ஆவணப்பதிவு எழுத்தர் சீனிவாசன், மதுரை மாநகராட்சி மண்டல அதிகாரிகள் ராஜபிரகாஷ், சூர்யபிரகாஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நான்கு பேரும், வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்தது தொடர்பாக மதுரை மேற்கு தொகுதி உதவி தேர்தல் அலுவலர் குருசந்திரனுக்கு விளக்கம் கேட்டு ஆட்சியர் நடராஜன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மதுரை விவகாரத்தைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவின் பேரில், கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி எம்.பாலாஜி, சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறை, சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்ட அவர், மதுரைத் தொகுதியில் போட்டியிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில், ராஜ்சத்யன் (அதிமுக), சு.வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), டேவிட் அண்ணாதுரை (அமமுக), அழகர் (மக்கள் நீதி மய்யம்), உட்படப் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த ஆலோசனையைத் தொடர்ந்து கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி பாலாஜி, நேற்று நடத்தப்பட்ட விசாரணை மற்றும் ஆலோசனைத் தொடர்பாக விரைவில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சத்யபிரதா சாஹூ, வாக்கு இயந்திரம் உள்ள இடத்தில் 24 மணி நேரமும் அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share