வேளாங்கண்ணியில் நடைபெற்றுவரும் 11 நாட்கள் திருவிழாவை முன்னிட்டு, தாம்பரம்-வேளாங்கண்ணி இடையிலான சுவிதா சிறப்பு ரயில் இன்று (செப்டம்பர் 5) மாலை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் தேர்விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர்பவனி, வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 8ஆம் தேதியன்று ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.
திருவிழாவின் ஒருபகுதியாக, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நேற்று பேராலயச் சிறிய தேர்பவனி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவுக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றனர். அதனால், போக்குவரத்து நெரிசல் இல்லாமலும், பயணிகள் அதிகமாக வரும் வசதிக்காகவும் தாம்பரம்-வேளாங்கண்ணி இடையிலான சுவிதா ரயில் இன்று மாலை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மாலை 5 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 10.10 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். அதேபோன்று, வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.45க்கு செப்டம்பர் 6ஆம் தேதி புறப்படும் ரயில் மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னைக்கு வந்தடையும். இந்த ரயில், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம், திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**விடுமுறை**
வேளாங்கண்ணி மாதா திருவிழாவையொட்டி வரும் 8ஆம் தேதியன்று நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்குப் பதிலாக, செப்டம்பர் 13ஆம் தேதியன்று வேலை நாளாகக் கொள்ளப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.�,