நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமான ஓட்டிகள் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் நிறுவனத்தை விட்டு வெளியேறிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
தனியார் துறை விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், சமீப காலமாக கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்து வருகிறது. இதனால் பெரும் கடன் சுமையில் ஜெட் ஏர்வேஸ் சிக்கியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக உரிய நேரத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் கூட வழங்க இயலாமல் இந்நிறுவனம் தடுமாறி வருகிறது. இதிலிருந்து மீண்டுவர பல்வேறு முயற்சிகளையும் அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தனது திறனைக் குறைத்து வருவதோடு, இயக்கத்தையும் குறைத்துள்ளது.
நிதி நெருக்கடியைக் குறைக்கும் விதமாகக் கடந்த வாரத்தில் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட 20 பேரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் விமான ஓட்டிகள் விருப்பப்பட்டால் நோட்டீஸ் காலம் முடியும் முன்னரே கூட வெளியேறலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தி எகனாமிக் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள தகவலில், ”ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஊழியர்களின் தனிப்பட்ட முடிவுகளுக்கு உரிய மரியாதை அளிக்கிறது. நிறுவனத்துக்கு வெளியே அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அங்கு அவர்கள் பணியைத் தொடர அனுமதியளிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 50 விமான ஓட்டிகள் கடந்த இரு மாதங்களில் ஜெட் ஏர்வேஸை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது 124 விமானங்களை இயக்கி வருகிறது. 16,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 2,000 விமான ஓட்டிகளும் அடங்குவர்.�,