j
ஏப்ரல் – ஜனவரி மாதங்களில் இந்தியாவின் மிகப் பெரிய துறைமுகங்கள் சரக்குகளைக் கையாளுவதில் 3.11 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன.
காண்ட்லா, மும்பை, ஜே.என்.பி.டி., மர்முகோவா, கொச்சின், நியூ மங்களூர், சென்னை, காமராஜர், வ.உ.சிதம்பரனார், விசாகப்பட்டினம், பாரதீப் மற்றும் கொல்கத்தா ஆகிய 12 துறைமுகங்களும் இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களாகும். இத்துறைமுகங்கள் நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான மாதங்களில் மொத்தம் 578.86 மில்லியன் டன் அளவிலான சரக்குகளைக் கையாண்டுள்ளன. இது சென்ற நிதியாண்டில் கையாளப்பட்ட சரக்குகளின் அளவை (561.39 மில்லியன் டன்) விட 3.11 சதவிகிதம் கூடுதலாகும்.
அதிகபட்சமாகக் காமராஜர் துறைமுகம் 15.56 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. அதைத் தொடர்ந்து கொல்கத்தா துறைமுகம் 9.86 சதவிகித வளர்ச்சியையும், கொச்சின் துறைமுகம் 8 சதவிகித வளர்ச்சியையும், ஜே.என்.பி.டி. துறைமுகம் 7.46 சதவிகித வளர்ச்சியையும், பாரதீப் துறைமுகம் 6.4 சதவிகித வளர்ச்சியையும் பதிவுசெய்துள்ளன. அதிக அளவிலான சரக்குகளைக் கையாண்ட துறைமுகமாக காண்ட்லா துறைமுகம் முன்னிலையில் உள்ளது. இத்துறைமுகம் மொத்தம் 94.55 மில்லியன் டன் அளவிலான சரக்குகளைக் கையாண்டுள்ளது.
பாரதீப் துறைமுகம் 89.98 மில்லியன் டன், ஜே.என்.பி.டி. துறைமுகம் 58.6 மில்லியன் டன், விசாகப்பட்டினம் 54.73 மில்லியன் டன், கொல்கத்தா துறைமுகம் 52.18 மில்லியன் டன் என்ற அளவில் சரக்குகளைக் கையாண்டுள்ளன. இந்த விவரங்களை மத்திய கப்பல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.�,