கேரள வெள்ள நிவாரண நிதியாக 700 கோடி ரூபாயை ஐக்கிய அரபு அமீரகம் அளிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அந்த நிதியை மத்திய அரசு ஏற்காது என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று கேரள மாநிலத்தில் பெருமழை பெய்யத் தொடங்கியது. அதன்பின், தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் அம்மாநிலத்தின் பல பகுதிகளில் பெருமழை தொடர்ந்தது. இதனால் கேரள மாநிலத்தின் பெரும்பகுதி நிலைகுலைந்தது. வயநாடு, பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட 12 மாவட்டங்கள் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதிலிருந்து மக்களை மீட்கும் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில், அவர்களது புனர்வாழ்வுக்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது மாநில அரசு.
நேற்று (ஆகஸ்ட் 21) திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதியை வழங்குவதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக, அபுதாபி இளவரசரான ஷெய்க் முகம்மது பின் ஜயித் அல் நஹ்யன் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது நிதியுதவி குறித்துத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். கேரளாவுக்கு மாலத்தீவுகள் நாடு ரூ.35 லட்சம் அளிப்பதாகக் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் கேரளாவுக்கு உதவி அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கேரள வெள்ள நிவாரணம் தொடர்பாக வெளிநாடுகளின் சார்பாக அனுப்பப்படும் நிதியுதவிகளை மத்திய அரசு ஏற்காது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி, இதுவரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வத் தகவல் ஏதும் வரவில்லை என்று அத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் எந்தவொரு நாடு மற்றும் பன்னாட்டு அமைப்புகளிடம் இருந்து நிதியுதவியைப் பெறுவதில்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. உத்தராகண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டபோது கூட, மத்திய அரசு வெளிநாட்டு அரசுகளின் உதவிகளை மறுத்ததாகத் தெரிவித்துள்ளனர் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள். 2013ஆம் ஆண்டு உத்தராகண்ட் வெள்ளத்தின்போது ரஷ்ய நாடு அளிக்க முன்வந்த உதவிகளை இந்தியா ஏற்க மறுத்தது என்றும், அவசரகால நிவாரணங்களை அளிப்பதற்குப் போதுமான வசதிகள் இருப்பதாகத் தெரிவித்தது என்றும், இதற்கு உதாரணம் காட்டியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம் குறித்த பினராயி விஜயனின் வார்த்தைகளும், மத்திய அரசின் தயக்கத்துக்குக் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. “கேரள மாநிலமானது ஐக்கிய அரபு அமீரகத்துடன் சிறந்த உறவைக் கொண்டுள்ளது. கேரள சமூகத்துக்கு இரண்டாவது நாடாக அது விளங்குகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த ஆதரவுக்கும், சகோதரத்துவத்துடன் அணுகுவதற்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். இது, கட்சிகளுக்கிடையிலான அரசியலைத் தூண்டிவிடுவதாகச் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 20ஆயிரம் கோடி பொருளாதாரச் சேதம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளது அம்மாநில அரசு. புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக, ரூ.2,600 கோடி நிதியுதவி அளிக்குமாறு மத்திய அரசைக் கேட்டுள்ளது. தற்போது வரை, மத்திய அரசானது கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியுதவி அளித்துள்ளது. மத்திய உள் துறை அமைச்சகமானது, கடந்த 20ஆம் தேதியன்று கேரள பெருமழை வெள்ளத்தை அதிதீவிர இயற்கைப் பேரழிவாக அறிவித்திருந்தது.�,