kமுகிலன் காணவில்லை: சிபிசிஐடி அறிவிப்பு!

Published On:

| By Balaji

சமூகச் செயற்பாட்டாளர் முகிலனைக் காணவில்லை என்று அவரது சுயவிவரங்களுடன் கூடிய சுவரொட்டி சிபிசிஐடி சார்பில் ஒட்டப்பட்டுள்ளது.

கடந்த மே 22ஆம் தேதியன்று தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூடு தொடர்பான சில ஆதாரங்களை வெளிப்படுத்தினார் சமூகச் செயற்பாட்டாளர் முகிலன். கடந்த பிப்ரவரி 15ஆம் தேதியன்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இந்த சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகளுக்குத் தொடர்புள்ளதாகக் கூறி சில வீடியோக்களை வெளியிட்டார். இந்த ஆதாரங்களை வெளியிடுவதால், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறினார். அன்று இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்றார் முகிலன். இதற்கடுத்த நாள் மதுரையில் ஒரு நிகழ்வொன்றில் கலந்துகொள்வதாகத் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருந்தார். சென்னை எழும்பூர் ரயில்நிலையம் வரை சென்ற முகிலன், அடுத்த நாள் மதுரைக்குச் செல்லவில்லை. இதையடுத்து அவர் காணாமல் போனதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அவர், எழும்பூர் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிய காட்சி சிசிடிவியில் பதிவானதாகத் தெரிவித்தனர் போலீசார். அவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் சார்பில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது. முகிலனை மீட்கக் கோரி சமூகச் செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கைத் தொடுத்தார். இந்த புகார் தொடர்பாக 148 பேரிடம் விசாரணை நடத்தியிருப்பதாகவும், மேலும் கால அவகாசம் வேண்டும் எனவும் சிபிசிஐடி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை மார்ச் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 2ஆம் தேதியன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் ‘முகிலன் எங்கே’ என்று அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த வாரம் எழும்பூர் ரயில்நிலையத்துக்குள் முகிலன் செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்திருப்பதாகத் தெரிவித்தனர் சிபிசிஐடி போலீசார். முகிலனின் செல்போன் சிக்னல் கூடுவாஞ்சேரி அருகே ஓலக்கூரில் கட் ஆனதாகவும், அந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்.

இந்த நிலையில், இன்று (மார்ச் 14) சென்னையில் ‘காணவில்லை’ என்று முகிலன் படத்துடன் கூடிய நோட்டீஸை வெளியிட்டுள்ளது சிபிசிஐடி. பிப்ரவரி 15ஆம் தேதி சென்னை – மதுரை மகால் விரைவி ரயிலில் பயணம் செய்வதற்காக முகிலன் எழும்பூர் ரயில்நிலையம் சென்றார் என்றும், அதன்பின் அவரைக் காணவில்லை என்றும் அதில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகிலனின் வயது, நிறம், உயரம் மற்றும் காணாமல் போன அன்று அவர் அணிந்திருந்த உடை குறித்த தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் தொடர்புகொள்ளுமாறு சிபிசிஐடி கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்ணும் அந்த நோட்டீஸில் வெளியிடப்பட்டுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share