மருத்துவ கலந்தாய்வை உடனடியாக தொடங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தடைவிதிக்க வேண்டும், வினாத்தாள் குளறுபடி, தேர்வு முடிவு தாமதம், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவிகித உள் ஒதுக்கீடு என மருத்துவ கலந்தாய்வுக்கு இடையூறாக இந்த ஆண்டு பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வந்தது. இந்திய மருத்துவக் கவுன்சிலிங் விதிப்படி, எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் நிலவும் பல்வேறு குழப்பங்களால் மருத்துவ கலந்தாய்வு எப்போது தொடங்கப்படும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் நீட் தேர்வில் இருந்து விளக்கு அளிக்கக் கோரி அவசரச் சட்ட மசோதாவை சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் நேற்று முன்தினம்(ஆகஸ்ட்-14) சமர்ப்பித்தார். மேலும் தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் பெறும் முயற்சியாகத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று(ஆகஸ்ட்-15) டெல்லி விரைந்தார். அதன்படி நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு விலக்கு அளிக்க வாய்ப்புள்ளதாகப் பரவலாக பேசப்படுகிறது.
எனவே, நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா? கிடைக்காதா ? கலந்தாய்வு எப்போது நடத்தப்படும்? என்ற குழப்பம் மாணவர்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உடனடியாக மருத்துவக் கலந்தாய்வை தொடங்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நாளை(ஆகஸ்ட்-17) விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,