நாடு முழுவதும் ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மருத்துவக் காப்பீடு (தேசிய சுகாதார காப்பீடு திட்டம்) பெற ஆதார் கட்டாயம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2018-2019 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நாடு முழுவதும் சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி அறிவித்திருந்தார்.
நாடு முழுவதும் 10 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன் பெறும் வகையில் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி, ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படும். இத்திட்டத்தில் சுமார் 50 கோடி மக்கள் பயனடைவார்கள். மேலும் இத்திட்டம் உலகிலேயே மிகப்பெரிய மருத்துவத்திற்கான நிதி ஒதுக்கீடு திட்டம் ஆகும்” என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அக்டோபர் 2ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்திட்டத்தில் பயன் பெற பயனாளிகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
“ஆதார் அட்டையில் பயனாளிகளின் உண்மையான விவரங்கள் இருக்கும் என்பதால், வருமானத்தைக் குறைத்துக்கொண்டு யாரும் இந்தத் திட்டத்தின் மூலமாகப் பயன் பெறக் கூடாது என்பதற்காக இந்த உத்தரவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் தலா 5 லட்சம் ரூபாய் வரை செலவிடப்படும் என்பதால், பல ஆயிரம் கோடி ரூபாய் இந்தத் திட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ளது. இதில் அதிகாரிகள் எந்தவிதமான முறைகேட்டிலும் ஈடுபடக்கூடாது என்பதற்காகவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக” மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.�,”