தந்தை பெரியாரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு, தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர்.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 140வது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதுமுள்ள பெரியார் சிலைகளுக்கு பல்வேறு கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர். பெரியார் பிறந்தநாள் சிறப்பு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகிலுள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு பல்வேறு தலைவர்களும் மலர்த் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழக அரசின் சார்பில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் இன்று காலை அஞ்சலி செலுத்தினர்.
**ஸ்டாலின் அஞ்சலி**
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் பெரியார் உருவப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். ஆர்.எஸ்.பாரதி, ஜெ.அன்பழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாமரருக்காகவே வாழ்நாளெல்லாம் வாதாடிய வழக்கறிஞர். சமூகத்தின் நோய்களை எல்லாம் அடையாளம் கண்டு குணப்படுத்திய மருத்துவர். தமிழர்களை தடி கொண்டு எழுப்பிய கொள்கைச் சூரியன். சரி எது தவறு என்று காட்டிய கலங்கரை விளக்கு.எங்கள் அய்யாவுக்கு நிகர் யார்?. வாழ்க தந்தை பெரியார்” என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கும், பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் நினைவிடத்திலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விசிக சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், பெரியார் நினைவிடத்தில் மலர்வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து சிம்சனில் வைக்கப்பட்டிருக்கும் பெரியாரின் உருவப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோல தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் உள்ளிட்ட தலைவர்களும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.�,”