kபெண்களின் தயக்கம்: மனம் திறந்த நயன்தாரா

Published On:

| By Balaji

உலகளவில் பிரபலமான இதழான ‘வோக்’ சூப்பர் சவுத் என்ற பெயரில், அக்டோபர் எடிசனாக முன்பக்க அட்டை வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் மகேஷ் பாபு, துல்கர் சல்மான் மற்றும் நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதற்காக வோக் இதழ் பிரேத்யேக போட்டோஷுட் நடத்தியிருக்கிறது. நடிகர் மகேஷ் பாபு, துல்கர் சல்மான் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய தென்னிந்தியாவின்் நட்சத்திரங்களை அடையாளம் கண்டு அவர்களை முன் பக்க அட்டையில் இடம்பெற வைத்துள்ளது.

இதில் வோக் இதழ் அட்டைப்படத்தில் இடம் பெற்ற ஒரே தென்னிந்திய நடிகை நயன்தாராதான். மலையாளத்துக்கு துல்கர் சல்மானையும், தெலுங்குக்கு மகேஷ் பாபுவையும் தேர்வு செய்த வோக் தமிழுக்கு நடிகை நயன்தாராவைத் தேர்வு செய்திருப்பது அவருக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இவர்கள் மூவரையும் தென்னிந்திய சினிமாவின் சிறந்த நட்சத்திரங்களாக அறிமுகப்படுத்தியிருக்கிறது வோக்.

அரிதாக நேர்காணல்களைக் கொடுப்பது, சர்ச்சைகளுக்குத் தேவைப்படும்போது மட்டுமே பதிலளிப்பது என ஊடக சந்திப்புகளைத் தவிர்த்து வந்த நயன்தாரா 10 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் மனம் திறந்துள்ளார். அதில், “நான் எல்லா நேரத்திலும் பிஸியாக படப்பிடிப்பில் இருக்கிறேன். நான் ஒரு வொர்க்கஹாலிக்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் வெளியான மலையாள திரைப்படமான லவ் ஆக்சன் டிராமாவில் நிவின் பாலியுடன் நயன்தாரா நடித்தார். இந்த மாதம் வெளியான சாய்ரா நரசிம்ம ரெட்டியில் நடித்திருக்கிறார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் மற்றும் விஜய்யின் பிகில் ஆகியவற்றில் நடித்து வருகிறார். முன்னதாக,ஹீரோக்கள் இல்லாத படங்களான அறம் (2017) மற்றும் கோலமாவு கோகிலா (2018) போன்ற பெண்களை மையமாகக் கொண்ட படங்களிலும் நடித்துள்ளார். இதுகுறித்து அவர் என்னுடைய தனி படங்களுக்கு, நானே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறேன். சில நேரங்களில், இயக்குநர்கள் கணவன் அல்லது ஆண் நண்பர்கள் தொடர்பான சப்பிளாட்டுகளைக் கொண்டுவரும் போது அது தேவையா என்று கேட்பேன்” என்றுள்ளார்.

சினிமாவில் ஆண்களுக்கு மட்டுமே ஏன் எல்லா அதிகாரங்களும் எப்போதும் இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், பிரச்சினை என்னவென்றால் உண்மையில் பெண்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதைக் கேட்கத் தயங்குவதே காரணம் என்கிறார்.

எப்போதும் முன்னணி நாயகியாக இருப்பது குறித்த கேள்விக்கு, “வெற்றியை என் தலைக்கேற விட மாட்டேன். நான் எப்போதுமே ஒரு பயத்தில் இருக்கிறேன். சரியான படத்தைக் கொடுக்கமாட்டேனோ என்ற பயத்திலேயே இருக்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

2007 முதல் 2011 வரை பல வெற்றிகளைக் குவித்த நயன்தாரா 2011 ல் 11 மாதங்கள் சினிமாவை விட்டு விலகியிருந்தார். இதுகுறித்து அவர், ”என்னுடைய தனிப்பட்ட வட்டத்துக்குள் நான் இருந்தேன். அப்போது டிவியில் வரும் எனது திரைப்படங்களையும் பாடல்களையும் கூட நான் பார்க்கவில்லை” என பதிலளித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டிற்கான ஃபோர்ப்ஸ் இந்தியா செலிபிரிட்டி 100பேர் பட்டியலில் உள்ள ஒரே தென்னிந்திய நடிகையான நயன்தாரா, ஏன் இன்னும் சில நடிகர்களின் படத்தில் கவர்ச்சியான கதாநாயகியாக நடிக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு “சில நேரங்களில் வேறு வழி இல்லை. எவ்வளவு நாட்கள் தான் முடியாது என்று என்னால் சொல்ல முடியும். நான் ரிஸ்க் எடுக்கத் தயங்கமாட்டேன்” என்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் எனது முதல் நேர்காணல் இது எனக் கூறும் நயன்தாரா, நான் என்ன நினைக்கிறேன் என்பதை எப்போதும் ஊடகங்களுக்குச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஊடகங்களால் நான் நிறைய முறை தவறாகக் கூறப்பட்டு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டேன். என்னை ஏளனமாக நகைத்தோர் அனைவருக்கும் நான் ஒருபோதும் பதில் சொன்னதில்லை. அவர்களுக்கான சிறந்த பதில் என்னுடைய வெற்றிப் படங்கள் தான்” என நம்பிக்கையுடன் நயன்தாரா கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் விக்னேஷ் சிவனை. நயன்தாராவின் ஃபியான்ஸி என்று குறிப்பிட்டுள்ளது வோக் இதழ். அதோடு இருவரும் சேர்த்து படங்களைத் தயாரிக்க உள்ளதாகவும். அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share