ஒரே தொகுதியில் இருந்து 9 முறை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட்தாக முதல்வர் பழனிசாமி பாட்டி கதை சொல்லியுள்ளார் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியை நேற்று டெல்லியில் சந்தித்தப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தாம் ஒரே தொகுதியில் 9 முறை சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளதாக கூறியிருந்தார். இது சமூக வலைதளத்தில் விமர்சனத்துக்கு உள்ளானது.
1989,1991, 1996,2006,2011,2016 என ஆறு முறை மட்டுமே அவர் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இதில் 4 முறை மட்டுமே அவர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், ஒரே தொகுதியில் இருந்து 9 முறை சட்டப்பேரவைக்கு வந்துள்ளேன் என அவர் தவறாக கூறியுள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரே தொகுதியில் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறேன்: எடப்பாடி – அப்படியா… எம்.பி.க்கும், எம்.எல்.ஏவுக்கும் சேர்த்துப் போட்டியிட்டதே 9 முறை தானே? அதில் 4 தோல்வியும் அடங்குமே? விடுங்க… பிள்ளைகளுக்குப் பாட்டி கதை சொல்வது போல டெல்லி பத்திரிகையாளர்களுக்குக் கதை சொல்லியிருக்கிறார்!” என முதல்வர் குறித்து விமர்சித்துள்ளார்.
இதேபோல், இந்தியா டுடே விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி விருதுகளையும் பெற்றிருந்தார். இது குறித்து விமர்சித்துள்ள ராமதாஸ், “தில்லியில் ‘இந்தியா டுடே’ விழாவில் தமிழகத்திற்கு 4 விருதுகள். எடப்பாடி பழனிச்சாமி பெற்றுக் கொண்டார்: செய்தி – டெல்லிக்கு புயல் நிவாரணம் வாங்கச் சென்றார்… அது கிடைக்காத நிலையில் விருது வாங்கி வந்தார். முதலமைச்சரின் திறமை வியக்கவைக்கிறது!” என கூறியுள்ளார்.�,