இந்தியாவின் முன்னணி ஊடகங்களில் ஒன்று இந்தியா டுடே. அது ஆண்டு தோறும் கான்க்ளேவ் என்ற விவாத கருத்தரங்கு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சியில் அரசியல், கலை, இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட பல வகை பிரபலங்கள் கலந்து கொள்வார்கள். அப்போதுள்ள அரசியல் நிலமைகள், சமூகத் தளத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கலை இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள புதிய வகைப்போக்குகள் என பல்வேறு விவாதங்களாக இவை நடப்பதால் அரசியல் ரீதியாக இந்த கான்க்ளேவ் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் உண்டு.
இதுவரை டெல்லியில் மட்டுமே நடந்து வந்த அந்த நிகழ்வை முதன் முதலாக சென்னையில் நடத்திய இந்தியா டுடே, ஆறு மாநில முதல்வர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரையும் அழைத்திருக்கிறது.அந்த வகையில், சென்னையில் நடப்பதால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல்வரான பன்னீர் செல்வத்தையும், அதிமுக பொதுச்செயலாளர் ஆகியுள்ள சசிகலாவையும் ஒரே மேடையில் ஏற்ற அனுமதி கேட்டு அதற்கான ஒப்புதலையும் பெற்றது.
ஜெயலலிதா மரணத்தின் பின்னர் பொது நிகழ்வொன்றில் சசிகலாவும், முதல்வர் பன்னீரும் கலந்து கொள்வது இதுவே முதன் முறை என்னும் நிலையில் பன்னீர் செல்வம் க்ளீன் ஷேவில் வந்திருந்தார். சசிகலாவும் பளிச்சென்று மேக்கப் போட்டு வந்திருந்தார். கான்க்ளேவ் நிகழ்ச்சி நடந்த அரங்கின் அருகிலேயே போட்டோ ஷுட்டிற்கான ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. திரைப்பட பிரபலங்கள் வருகிறவரை இப்படி போட்டோ ஷுட் பண்ணி வைத்துக் கொள்வது ஊடக வழக்கம்.
சசிகலா வந்ததும் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்பாக போட்டோ ஷூட் நடத்தினார்கள். அதில் கேமிராவுக்கு ஏற்ற மாதிரி நின்று திரும்பி போஸ் கொடுத்தார். பின்னர் இந்தியா டுடே நிர்வாக ஆசிரியரும், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவருமான ராகுல் ஹன்வால் வருகிற பிரபலங்களை பேட்டி எடுத்தார். அது லைவாகவும் ஒளிபரப்பானது. சசிகலாவை பேட்டி எடுத்த போது “இந்த நிகழ்ச்சி பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?” எனக் கேட்டதற்கு “ முதன் முதலாக கான்க்ளேவ் தமிழகத்தில் செய்திருக்கீங்க, பிராந்திய மொழிகளில் இந்தியா டுடே செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழிலும் இந்தியா டுடே வருவது ரொம்ப மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
அடுத்த ஒரு கேள்விக்கு “ஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பார்” என்றார். இந்தியா டுடேயின் தமிழ் பதிப்பு 2015 –பிப்ரவரியில் மூடப்பட்டது. அதைக் கூட தெரிந்து கொள்ளாமல் பேசிய சசிகலா பின்னர் ஜெயலலிதா பற்றிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார். அக்கண்காட்சியில் தொகுக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்தைப் பார்த்து கண் கலங்கினார். பின்னர் மாநாட்டின் துவக்க உரையை பன்னீர் செல்வம் ஆங்கிலத்தில் எழுதி வைத்து வாசித்தார். அதில் இரண்டு இடங்களில் சின்னம்மா என்று குறிப்பிட்டார். முதல்வர் பன்னீர் செல்வம் பேசத்துவங்கியதும் வெடுக்கென்று எழுந்த சசிகலா கட்சி அலுவலகத்தில் பணி இருப்பதாகச் சொல்லி கிளம்பினார்.
அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா கடந்த சில தினங்களாக கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். ஆனால், இந்தியாவின் மிக முக்கியமான மாநாடு ஒன்றில் முதல்வர் பேசிக் கொண்டிருந்த போதே சசிகலா எழுந்து சென்றது அரங்கில் அமர்ந்திருந்த அத்தனை பேரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விரைவில் முதல்வராக பதவியேற்க இருக்கும் சசிகலா எழுந்து சென்றது சர்ச்சைகள் எதையும் உருவாக்க வில்லை. ஆனால் பன்னீர் செல்வத்தின் மீது மரியாதை வைத்திருப்போருக்கு அது சங்கோஜமாக இருந்தது.
�,