சட்டபூர்வமாக நடைபெறும் பட்டாசுத் தொழிலுக்கு எப்படி தடை விதிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதிக மாசு ஏற்படுத்துவதாகக் கூறி பட்டாசுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எஸ்.ஏ.நசீர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
இன்று (மார்ச் 12) இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, பட்டாசுகள் மற்றும் வாகனங்களால் ஏற்படும் மாசுபாடு விகிதம் குறித்த அட்டவணை ஏதும் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர் நீதிபதிகள். காற்று மாசு குறித்த அட்டவணையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
“பட்டாசுகளை விட வாகனங்களில் இருந்து வெளிவரும் மாசுதான் அதிகளவில் மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுபடும் மக்கள் வேலையிழந்து உள்ளனர். வேலைவாய்ப்பின்மையை உருவாக்க நீதிமன்றம் விரும்பவில்லை. பட்டாசுக்கு தடை விதித்து, ஆலைகள் மூடினால், பல லட்சம் தொழிலாளர்கள் பட்டினியால் வாடுவார்கள். தொழிலாளர்களுக்கு பணத்தையோ, மாற்று வேலை வாய்ப்பையோ நீதிமன்றங்களால் வழங்க முடியுமா என்று கேள்வி எழுப்பினர். பட்டாசுத் தொழிலாளர்களுக்கான மாற்று வழியை மத்திய அரசுதான் கூற வேண்டும். நீதிமன்றத்தால் வேலைகளை உருவாக்கித் தர முடியவில்லை என்றாலும், அதனுடைய உத்தரவுகள் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடாது என்றனர்.
பட்டாசு ஆலைகளுக்கான விதிமுறைகளைத் தான் மாற்றி அமைக்க முடியும். இந்தியாவில் இருப்பது போன்று வேறெங்கும் மக்கள் பட்டாசுகளை விரும்புவதில்லை” என நீதிபதிகள் கூறினார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
�,