கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் அவை ஒத்திவைக்கப்பட்டதை எதிர்த்து பாஜக உறுப்பினர்கள் சட்டமன்றத்திலேயே இரவு முழுவதும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இன்று காலையில் சட்டமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏக்களை துணை முதலமைச்சர் பரமேஷ்வரா சந்தித்து அவர்களுடன் காலை உணவருந்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு இரவு முழுவதும் பாஜக எம்.எல்.ஏக்கள் தர்ணாவில் இருந்தனர். அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்ய வேண்டியது எங்களது பொறுப்பு. அவர்களில் சிலருக்கு நீரிழிவு, ரத்தக் கொதிப்பு போன்ற பிரச்சினைகள் உள்ளன. அதனால் எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்துள்ளோம். அரசியல் கடந்து நாங்கள் நண்பர்கள். அதுதான் ஜனநாயகத்திற்கு அழகு” என்று கூறினார்.
இன்று 1.30 மணிக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜுபாய் வாலா அறிவுறுத்தியுள்ளார். இதுபற்றி பேசிய பாஜக கொறடா சுரேஷ் குமார், “1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தையோ, குடியரசுத் தலைவரையோ நாடுவோம். நம்பிக்கை வாக்கெடுப்பை தாமதிக்க காங்கிரஸும், ஜேடிஎஸ் கட்சியும் அற்பமான காரணங்களை சொல்கின்றனர்” என்று தெரிவித்தார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இதே ஆளுநர்தான் கடந்த ஆண்டு எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் அளித்தார். குதிரை பேரம் நடத்த அது போதுமான நேரமாக இருந்தது. இப்போது அவர் சட்டவிரோதமான உத்தரவுகளை முதல்வருக்கு பிறப்பிக்கிறார்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
11 மணியளவில் சட்டமன்றம் கூடியது. அப்போது பேசிய சபாநாயகர் ரமேஷ் குமார், “என் மீது குறை கூறுபவர்கள் உங்களது வாழ்க்கையை முதலில் கவனியுங்கள். மற்றவர்களைப் போல் லட்சக் கணக்கில் நான் பணத்தை பதுக்கி வைக்கவில்லை. எல்லாவற்றையும் கடந்து பாகுபாடற்ற முடிவை எடுப்பதற்கான தைரியம் எனக்கிருக்கிறது” என்று கூறினார்.
பின்னர் பேசிய முதல்வர் குமாரசாமி, “நான் முதல்வராக பதவியேற்ற நாள் முதல் பாஜக ஆட்சிக்கு உரிமை கோரி வருகிறது. அவர்கள் 16-17 மாதங்களாக இதைத்தான் சொல்கின்றனர். அரசைக் கவிழ்க்க முதல்நாள் தொட்டு முயற்சித்து வருகின்றனர். எடியூரப்பா முதல்வராக இருந்தபோது அவருக்கு ஏற்பட்ட அதே நிலைமையில் நான் இப்போது இருக்கிறேன். அதிகாரம் என்பது நிலையானதல்ல. ஆட்சியாளர்கள் வந்துபோவார்கள். முதலமைச்சராவேன் என நான் கனவு கண்டதுகூட இல்லை. நான் முதல்வரானது ஒரு விபத்து” என்று பேசினார்.
எம்.எல்.ஏக்களுக்கு பாஜக பணம் வழங்க முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஸ்ரீனிவாஸ் கவுடா குற்றம்சாட்டினார். அவர் பேசுகையில், “பாஜக எம்.எல்.ஏக்கள் அஸ்வத் நாராயண், சி.பி.யோகேஷ்வர், விஸ்வநாத் ஆகியோர் என்னை எனது இல்லத்தில் சந்தித்து ரூ.5 கோடி தருவதாக சொன்னார்கள். ஆனால் நான் பணத்தை ஏற்க மறுத்துவிட்டேன். பின்னர் ரூ.30 கோடி தருவதாக சொன்னார்கள். யார் யார் எவ்வளவு பணம் பெற்றுள்ளார்கள் என எனக்கு தெரியும். இல்லையென்று அவர்கள் சொல்லட்டும், நான் பதிலளிக்கிறேன்” என்று குற்றம்சாட்டினார்.
முதலமைச்சர் குமாரசாமியோ, “எங்களது எம்.எல்.ஏ மகாதேவிற்கு ரூ.40 கோடி முதல் 50 கோடி வரை தருவதாக சொல்லியிருக்கிறார்கள். அதுதொடர்பான அலைபேசி பதிவுகள் சமூக வலைதளங்களிலேயே பரவிவிட்டன” என்று குற்றம்சாட்டினார்.
மறுபுறம், சாபாநாயகர் சட்டப்படி செயல்படவில்லை என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பிரஹலாத் ஜோஷி குற்றம்சாட்டினார். அதைத்தொடர்ந்து அவையில் பேசிய சபாநாயகர், “நான் நெருப்பில் உட்கார்ந்திருக்கிறேன். என் மீது தொடர்ந்து குறை கூறுகின்றனர். என் வீட்டுக்கு வந்து பாருங்கள். என் வீட்டில் செக்யூரிட்டி கூட கிடையாது. சுயநலத்திற்காகவும், பேராசைக்காகவும் இதையெல்லாம் செய்கின்றனர். நேர்மையானவர்கள் எங்கு சென்று பிழைப்பது? எல்லோரும் பேசுங்கள், எல்லாமும் பதிவாகட்டும்” என்று கடுமையாக சாடினார்.
**
மேலும் படிக்க
**
**[‘காம்ரேட்’டாக மாறிய விஜய் சேதுபதி](https://minnambalam.com/k/2019/07/19/26)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”