தென் சென்னையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து இன்று (ஏப்ரல் 1) பிரச்சாரம் செய்ய இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் நிகழ்ச்சி திடீரென ரத்துசெய்யப்பட்டுள்ளது.
தென் சென்னை மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜெயவர்தன் போட்டியிடுகிறார். இத்தொகுதிக்கு உட்பட்ட நெசப்பாக்கம், கோடம்பாக்கம், நொளம்பூர், வில்லிவாக்கம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய இன்று பயணத் திட்டம் தயார் செய்திருந்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
இன்று காலை பிரச்சாரத்துக்கு தயாரான துணை முதல்வரைத் தொடர்பு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென் சென்னை பகுதிக்குப் பிரச்சாரத்துக்குப் போகவேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.
துணை முதல்வரின் பயணத்துக்கு முதல்வர் ஏன் தடை போட வேண்டும் என விசாரித்தோம்.
“இன்று துணை முதல்வர் பிரச்சாரம் செய்யும் பகுதிகளில் அதேநேரத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும் நடிகருமான உதயநிதி, திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து ஒன்பது பாயின்ட்டுகளில் பிரச்சாரம் செய்கிறார் என்றும், இதனால் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும்போது சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் என்றும் சென்னை மாநகர காவல்துறை உளவுத்துறை அலார்ட் மெசேஜ் போட்டுள்ளார்கள். இத்தகவல் முதல்வருக்கு தெரியப்படுத்தப்பட்டு அதன் பின் அது துணை முதல்வருக்கு பாஸ் செய்யப்பட்டிருக்கிறது.
துணை முதல்வர் பிரச்சாரப் பயணத்தை ரத்துசெய்தாலும், முதல்வரும், துணை முதல்வரும் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான கோபத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். துணை முதல்வர் பிரச்சாரம் செய்யும் இடங்களில் அதேநேரங்களில், திமுக,வை சேர்ந்த உதயநிதிக்கு எப்படி நேரம் ஒதுக்கினார்கள், ஆட்சி மாறிவிடும் என்று அதிகாரிகள் மாறுகிறார்களா என கொந்தளித்துள்ளாராம் முதல்வர். இதையடுத்து துணை முதல்வர் தொடர் பிரச்சாரத்தால் உடல் சோர்வுற்று இருப்பதால் இன்று பிரச்சார பயணத்தை ரத்து செய்துள்ளார்” என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.�,