சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டதால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து ரூ.24,500 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய அரசால் ஜூலை மாதம் 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. இந்த ஒற்றை வரி விதிப்பு முறையால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் மத்திய அரசு சார்பாக மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், நவம்பர் 30 கணக்குப்படி, ஜூலை மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் மாநிலங்களுக்கு ரூ.24,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இத்தொகை முழுவதும் மத்திய அரசால் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித் துறை இணையமைச்சரான சிவ் பிரதாப் சுக்லா மக்களவையின் கேள்வி நேரத்தின்போது தெரிவித்துள்ளார்.
அதிகபட்சமாகக் கர்நாடக மாநிலத்துக்கு ரூ.3,271 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்துக்கு ரூ.2,282 கோடியும், பஞ்சாப் மாநிலத்துக்கு ரூ.2,098 கோடியும் ராஜஸ்தான் மாநிலத்துக்கு ரூ.1,911 கோடியும், பீகார் மாநிலத்துக்கு ரூ.1,746 கோடியும், உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.1,520 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.1,008 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.1,020 கோடியும் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டாலும், ஜிஎஸ்டியின் பலன்களை நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில்லை என்று சுமார் 169 புகார்கள் மக்களிடமிருந்து வந்துள்ளதாக சிவ் பிரதாப் சுக்லா குறிப்பிட்டுள்ளார்.�,