kசிறப்புக் கட்டுரை: அடமானத்தில் தமிழகம்?

Published On:

| By Balaji

சேது ராமலிங்கம்

தமிழகத்தின் வளர்ச்சி குறித்து ஆழமாக அலசும் சிறப்புத் தொடர்

தமிழகத்தின் வளர்ச்சி என்றாலே அது சென்னை திருச்சி கோவை போன்ற நகரங்களின் வளர்ச்சி என்றாகி விட்டது. நவீன கட்டடங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், பிரம்மாண்டமான பாலங்கள், நான்கு வழிச் சாலைகள் ஆறு வழிச் சாலைகள், மெகா மால்கள், மெட்ரோ ரயில போன்றவை, பப்புகள், செயற்கையான பூங்காக்கள், தீம் பார்க்குகள் என்றாக வளர்ச்சி நகரம் சார்ந்ததாக வீங்கியுள்ளது. இந்த வீக்கத்தில் இவற்றை நிர்மாணித்த உழைக்கும் மக்களுக்கு இடம் இல்லை.

**நகரம் சார்ந்த வளர்ச்சி**

நகர வளர்ச்சித் திட்டங்களுக்காக விசிறி எறியப்பட்டவர்கள் வீடற்றவர்களாகவும் சேரிகளாகவும் வாழ்வாதாரத்திற்காகப் பல அமைப்பு சாராத் தொழில்களில் ஈடுபட்டுக்கொண்டு நகருக்கு வெளியே தள்ளப்பட்டுள்ளனர். நகர்களிலும் பல ஊர்களிலும் பூர்வீகமாக வாழ்ந்துவந்தாலும் வளர்ச்சித் தி்ட்டங்களுக்காக வாழ்ந்த இடத்தை விட்டுத் துரத்தப்படுகிறார்கள். அதையும் மீறிக் குடியிருப்பவர்களைச் சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்களாகவும் அத்துமீறி நகருக்குள் இருப்பவர்களாகவும் கிரிமினல்களாகவும்தான் பார்க்கப்படுகிறார்கள்.

கிராமங்களின் வளங்களையும் உழைப்பையும் சுரண்டி வளரும் நகரங்களின் வளரச்சி மாதிரி (Development Model) அங்குள்ள விளிம்பு நிலை மக்களை, தாங்கள் ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டோம் என்ற காரணத்தை அறிய முடியாத நிலையிலேயே வைத்திருக்கிறது.

விளிம்பு நிலை மக்களால் தற்போதைய வளரச்சி மாதிரியின் பயன்களை அனுபவிக்க முடியாததற்குக் காரணம் அவர்கள் படிப்பறிவற்றவர்கள், சோம்பேறிகள் என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டு அது ஆழமாக மேட்டுக்குடியினரின் மனங்களில் பதிக்கப்பட்டுள்ளது. இதை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுனிதி குமார் கோஷ் என்ற ஆய்வாளர் லும்பன் டெவலப்மென்ட் (Lumphen Development) அதாவது உதிரிகளின் வளர்ச்சி என்கிறார்.

உண்மை என்னவென்றால் 80 விழுக்காடு நகரங்களில் உள்ள சாதாரண மக்கள் எண்ணற்ற கடுமையான உடலுழைப்புத் தொழில்களில் ஈடுபட்டு தங்களது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யவே போராட்டமான வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நாட்டின் முன்னேற்றம் நகரங்களின் முன்னேற்றம் என்றாகிவிட்டது. இதனால் கிராமங்களுக்கும் நகரங்களுக்குமிடையிலான இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. அது மட்டுமின்றி நகரங்களிலுள்ள உழைக்கும் மக்களுக்கும் ஏழைகளிலும் ஏழைகளாக உள்ள விளிம்பு நிலை மக்களுக்கும் நகர வளர்ச்சியை முழுமையாக அனுபவிக்கும் மேட்டுக்குடியினருக்குமான இடைவெளியும் பெருகிக்கொண்டேபோகிறது.

**நிதி மூலதனமே திணிக்கிறது**

அரசியல் சாசனம் அரசு வளர்ச்சிக்கான வாய்ப்பை அனைத்து மக்களுக்கும், குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்துச் சமமாக வழங்க வேண்டும் என்று கூறுகிறது. தற்போதைய இந்த வளர்ச்சி மாதிரி நாட்டை முன்னேற்றிவிட்டதாகப் பல புள்ளிவிபரங்களைப் பொருளாதார நிபுணர்கள் அடுக்கிறார்கள். மக்களோ தங்களது மனித சக்திக்கும் மேலாக உழைக்கிறார்கள். அவர்களில் வாழ்க்கையில் நுகர்வுப்பொருட்களை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர எந்த வளர்ச்சியும் இல்லை. இந்த வளர்ச்சியானது சர்வதேச நிதி மூலதனத்தினாலும் இதர மூலதனத்தினாலும் திணிக்கப்படும் வளர்ச்சியாகும். இத்தகைய வளர்ச்சி மாதிரியை மேட்டுக்குடியினருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்குமானதாகவும் நிதி மூலதனமே உருவாக்கியது.

உண்மையில் சொல்லப்போனால், மிகச் சிலருக்கு அதிகப் பலன்கள் தரும் இந்த வளர்ச்சி மாதிரி, ஒட்டுமொத்த மக்கள் மீதும் திணிக்கப்படுகிறது. இந்த மாதிரி குறித்து நாம் விரிவான கண்ணோட்டத்துடன் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

**அரசின் பங்கே மாறுகிறது**

தமிழகத்தின் நகரமயமாக்கப்படும் மேட்டுக்குடி சார்ந்த வளர்ச்சி குறித்த நமது ஆய்வை 2012இல் முந்தைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கொண்டு வந்த தமிழகத்தின் தொலை நோக்கு -2023 தமிழகத்திற்கான கட்டுமான வளர்ச்சிக்கான திட்டம் என்ற ஆவணத்திலிருந்தே தொடங்குவோம். தமிழகத்தை மிக முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக மாற்றுவதே இந்தத் தொலைநோக்குத் திட்டத்தின் நோக்கம். ஆனால், அடிப்படையில் இந்தத் திட்டம் அரசியல் சாசனத்தில் கூறப்படும் சமத்துவம் சோசலிசம் ஆகிய கருத்தாக்கங்களுக்கு எதிரானது.

அரசியல் சாசனம் குடிமக்களைப் பாதுகாத்து அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பொறுப்பைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த ஆவணத்திலோ அரசின் குடிமக்கள் மீதான பொறுப்பும் பங்களிப்பும் மறு உருவாக்கம் செய்யப்படுகின்றன. சேவை அளிப்பவர் என்ற அரசின் நிலை மாற்றப்படுகிறது. சேவைகளை வழங்கும் பொறுப்பைத் தனியாருக்கு தாரைவார்த்துவிட்டுத் தனியார் மேற்கொள்ளும் சேவைகளை வழி நடத்துபவராகவும் மேற்பார்வையிடுபவராகவும் அரசின் பங்கு மாற்றப்பட்டுள்ளது. இதுவரை அரசிடம் இருந்துவந்த அடிப்படைக் கட்டுமான வசதிகளான குடியிருப்பு, நீர், சுகாதாரம், எரிசக்தி, போக்குவரத்து, நீர்ப்பாசனம், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி ஆகிய துறைகளுக்குத் தனியாரிடமிருந்து குறிப்பாக சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து மூன்றில் 2 மடங்கு முதலீடு பெறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

**10 லட்சம் கோடி ரூபாய்**

இந்த அடிப்படை வசதிகளுக்கான திட்டங்களுக்கான மொத்த மதிப்பீடு 15,00,0000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. திட்டங்களுக்கான காலம் 11 ஆண்டுகள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 10,00,000 கோடி ரூபாய் வரை தனியாரிடமிருந்து பெறப்பட உள்ளது. இவ்வளவு தொகையை முதலீடு செய்யும் சர்வதேச நிதி அமைப்புகளும் கார்ப்பரேட்டுகளும் என்ன நோக்கத்தைக் கொண்டிருக்கும்?

அடுத்த பகுதியில் பார்ப்போம்…�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share