பொதுவாக உடல்நிலை சரியில்லாமை, வெளியூருக்குச் செல்வது போன்ற காரணங்களுக்காக அலுவலகங்களில் விடுமுறை கேட்பது வழக்கம். ஆனால், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒருவர் சிக்கன் சாப்பிடுவதற்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்க வேண்டும் என தனது உயர் அதிகாரிக்குக் கடிதம் எழுதியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தீப்கா ரயில்வே நிலையத்தில் பங்கஜ் ராஜ் என்பவர் ஸ்டேஷன் மாஸ்டராகப் பணிபுரிந்து வருகிறார். ‘ஷ்ரவன்’ என்ற இந்து பண்டிகை ஒவ்வோர் ஆண்டும் பருவமழை தொடங்கும்போது அங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. இந்தப் பண்டிகை தொடங்கியதும், ஒரு மாதத்துக்கு அசைவ உணவைச் சாப்பிடக் கூடாது என்பது வழக்கம். அதனால், ‘எனக்கு சிக்கன் சாப்பிட ஒரு வாரம் (ஜூன் 20-27) விடுமுறை அளிக்க வேண்டும். அப்போதுதான், உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கும். அதன்பின், என்னால் உற்சாகமாக வேலை பார்க்க முடியும்’ என கூறியுள்ளார்.
இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவருக்கு விடுப்பு வழங்கப்பட்டதா என்பது தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முயற்சி செய்ததில் பலனில்லை என ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டிருந்தது.�,