ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக இந்தியாவின் தங்கம் இறக்குமதி 43 சதவிகிதம் சரிவைச் சந்தித்துள்ளது.
அக்டோபர் மாதத்துக்கான தங்கம் இறக்குமதி குறித்த விவரங்களை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 1.68 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கத்தை அக்டோபர் மாதத்தில் இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது 2017ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 2.95 பில்லியன் டாலர் மதிப்பை விட 43 சதவிகிதம் குறைவாகும். தங்கம் இறக்குமதியில் ஏற்பட்ட இந்தச் சரிவு காரணமாக இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அக்டோபர் மாதத்தில் 17.13 பில்லியன் டாலராக விரிவடைந்துள்ளது. சென்ற ஆண்டின் அக்டோபரில் இதன் மதிப்பு 14.61 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது.
தங்கம் பயன்பாட்டில் சீனாவைத் தொடர்ந்து மிகப் பெரிய நுகர்வோராக உள்ள இந்தியா, ஆண்டுக்கு 900 டன் அளவிலான தங்கத்தை இறக்குமதி செய்கிறது. இறக்குமதி செய்யப்படும் தங்கம் பெரும்பாலும் நகைத் துறையினராலேயே நுகரப்படுகிறது. எனினும் இந்த அக்டோபர் மாதத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக இந்தியாவின் தங்கம் இறக்குமதியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. வெள்ளி இறக்குமதியைப் பொறுத்தவரையில் 51.7 சதவிகித உயர்வுடன் மொத்தம் 526.2 மில்லியன் டாலர் மதிப்பிலான வெள்ளியை அக்டோபர் மாதத்தில் இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது.�,