�
நிதி மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள ஐசிஐசிஐ வங்கி நிர்வாக இயக்குநர் சாந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சருக்கு வருமான வரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
வருமான வரிச் சட்டம் பிரிவு 131-ன்கீழ் தீபக் கோச்சருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தீபக் கோச்சருக்குச் சொந்தமான நியூ பவர் ரினியூவபிள்ஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட தனிநபர் நிதிக் கடன், வருமான வரி ரிட்டன் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்கும்படி அந்த நோட்டீஸில் வருமான வரித் துறையினரால் தீபக் கோச்சர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். மேலும், அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த சில கேள்விகளும் வருமான வரித் துறையினரால் எழுப்பப்பட்டுள்ளன. நியூ பவர் ரினியூவபிள்ஸ் நிறுவன ஊழியர்கள் சிலருக்கும் வருமான வரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அவர்களிடமிருந்து வரும் பதில்களைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கையில் வருமான வரித் துறை இறங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வருமான வரித் துறையின் பார்வையில் உள்ள தீபக் கோச்சரை விசாரிக்க சிபிஐ அமைப்பும் தயாராகியுள்ளது. சிபிஐ தனது முதற்கட்ட விசாரணையில் ஐசிஐசிஐ வங்கி உயரதிகாரிகள் சிலரிடமும் தனது விசாரணையை மேற்கொண்டுள்ளது. 2012ஆம் ஆண்டில் வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கிய விவகாரத்தில் ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரும் தீபக் கோச்சரின் மனைவியுமான சாந்தா கோச்சரிடமும் சிபிஐ விசாரணை தொடங்கவுள்ளது. ஏற்கெனவே வீடியோகான் நிறுவனத்தின் தலைவர் வேணுகோபால் தூத் சிபிஐ வளையத்தில் சிக்கியுள்ளார்.
�,