விவேக் கணநாதன்
காந்தியின் 150ஆவது ஆண்டை ஒட்டி, காந்தியைப் பற்றிய மாற்றுப் பார்வைகளை மீளாய்வு செய்யும் குறுந்தொடர்
காந்தியைக் கைவிடல் என்பது, அவரைத் தன்னுடைமை செய்துகொள்ள முடியாமையின் தோல்வியிலிருந்து பிறக்கிறது. காந்தியைத் தன்னுடைமை செய்துகொள்ள இந்தியாவின் அனைத்துத் தரப்புகளுமே முயன்றிருக்கின்றன. ஆனால், அவர் எந்தவொரு தரப்பின் ஆளாகவும் தன் அரசியலை நடத்தவில்லை. மாறாக தன் அரசியலின் பொருட்டு, எல்லாத் தரப்புகளையும் ஈடுசெய்பவராக அவர் இருந்தார். காந்தியின் தந்தைமையே அதில்தான் இருக்கிறது.
காந்தியைத் தன்னுடைமை செய்துகொள்வதில் ஏற்படும் தோல்வியே காந்தி நிராகரிப்பு மற்றும் வெறுப்பாக மாறுகிறது. இதனால், இன்றைக்கு காந்தியைக் குறித்த விவாதத்தின் தொடக்கம் என்பது காந்தி வெறுப்பிலிருந்தே தொடங்குகிறது. காந்தி இன்று நடைமுறைப் பயனற்ற புராணப் பண்டத்தைப் போலப் பார்க்கப்படுகிறார். காரைக்குடியில் இருக்கும் பிரமாண்டமான, வியக்கத்தக்க, பேரழகான வளமனைகள் இன்றைக்கு நடைமுறை வாழ்க்கைக்குப் பயன்படாத பழங்காலத்தின் செல்வ எச்சமாக நிற்கின்றன. காந்தியின் புனித உருவம் இந்திய மனதில் இன்றைக்கு அப்படித்தான் இருக்கிறது.
**காந்தி அந்நியமானது எப்படி?**
மீப்படுத்தலால் நடைமுறையிலிருந்து அந்நியமாக்கப்பட்டவர் காந்தி. புனிதர், மகாத்மா, தேசப்பிதா, அற்புதமானவர், அகிம்சா மூர்த்தி, சத்திய சீலர், உத்தமர் என்பதாக காந்தியை இந்திய பாடப் புத்தகங்கள் பள்ளிகளில் கொண்டு சேர்க்கின்றன. முற்போக்குக் கருத்தியல் வாழ்க்கைக்குள் நுழையும்போதும், நடைமுறை வாழ்க்கையின் சிக்கலுக்குள் நுழையும்போதும் இந்த ஆலாபனைகள் எரிச்சலூட்டுபவையாகவும், வெற்று அலங்காரங்களாகவும் தெரிகின்றன.
அறிவுத் தரப்பின் ஒருபக்கம் புனிதராக்கப்படும் காந்தி, இன்னொருபுறத்தில் அந்நியக் கைகூலியாக, முதலாளித்துவத்தின் தூதுவராக, தொழிலாளர் வர்க்கத்தின் எதிரியாக, சாதியின் ஆதரவாளராக, பிற்போக்குவாதியாக, வெற்று வீம்பாலும் தன்னுடைய சுயநலத்தாலும் இந்தியா அடைந்திருக்க வேண்டிய நன்மைகளைக் கெடுத்தவராகத் தூற்றவும், விமர்சிக்கவும் படுகிறார்.
இந்தியாவின் மூன்று முக்கியமான முற்போக்கு சக்திகள் கம்யூனிஸ்ட்கள், சீர்திருத்த அரசியலை முன்னெடுக்கும் அரசியல் கட்சிகள், தலித்திய அமைப்புகள். இவை மூன்றுமே காந்தியை மிகப் பெரும்பாலும் நிராகரிக்கின்றன. இதனால், முற்போக்கு சிந்தனை மரபுக்குள் இயங்கத் தொடங்கும்போது எந்தவோர் இயக்கவாதியும் தன் தரப்பின் பொருட்டு காந்தியைக் கைவிட்டுவிடும் வழக்கம் இயல்பானதாக இன்று மாறியிருக்கிறது. இவ்வமைப்புகள் பெரும்மக்கள் சக்திகளாகவும் இருப்பதால் காந்தி வெறுப்பு களத்திலும் எதிரொலிக்கிறது.
**தமிழ்நாட்டில் காந்தி வெறுப்பு**
தமிழ்நாட்டில் காந்தி நிராகரிப்பு மற்றும் வெறுப்பின் இரண்டு முக்கியமான தரப்புகள் இரட்டை வாக்குரிமையை ஆதரிக்கும் அம்பேத்கரியவாதிகளும், நேதாஜி ஆதரவாளர்களும். இதில் அம்பேத்கரியவாதிகள் காந்தியை நிராகரிக்கும் இடம் புரிந்துகொள்ளத்தக்கது. கோட்பாட்டு ரீதியிலான முரணிலிருந்து எழும் நிராகரிப்பு அது. இரட்டை வாக்குரிமையும், தனி வாக்காளர் தொகுதியும் தலித்துகள் அதிகாரம் பெற உதவியிருக்கும் என்கிற நம்பிக்கையின் வெளிப்பாடே அந்நிராகரிப்பு.
1932 செப்டம்பர் பூனா ஒப்பந்தத்தின்மூலம் தலித்களுக்கு இரட்டை வாக்குரிமைக்குப் பதிலாக, தனித்தொகுதிகள் என்கிற முடிவு எட்டப்பட்டது. தலித்களுக்கு அன்றைய பிரிட்டிஷ் மாகாணங்களில் 148 தனி வாக்காளர் தொகுதிகள் என முடிவு செய்யப்பட்டது. ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட பிறகு உரையாற்றிய அம்பேத்கர், மிகவும் இக்கட்டான கட்டத்திலிருந்து என்னை விடுவித்த மகாத்மாவுக்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன் என்றும், காந்தியுடன் ஒரு தீர்மானத்திற்கு வந்ததற்காக மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார். மேலும், இரட்டை வாக்குரிமையோடு 78 தொகுதிகள் என்பதற்குப் பதில், ஒற்றை வாக்குரிமையோடு 148 தனித்தொகுதிகள் என்பது இந்து சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினரை ஈர்த்துக் கொள்ளும் பிரச்சினைக்கு இறுதியான தீர்வாக இருக்க முடியும் என்று நான் நம்பவில்லை. பரந்த சமுதாயப் பிரச்சினைக்கு எந்தத் தேர்தல் ஏற்பாடும் ஒரு தீர்வாக இருக்க முடியாது என நான் கருதுகிறேன் என்று குறிப்பிட்டார்.
1935 இந்திய அரசுச் சட்டத்தின்படி தேர்தல் நடக்கும்போது இரட்டை வாக்குரிமையால் கிடைக்கும் அதிகாரம், ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி பெறவும், விழிப்புணர்வு பெறவும் உதவும் என்று அம்பேத்கர் கருதினார். அதனால்தான், பூனா ஒப்பந்த நிறைவுரையில் ஒடுக்கப்பட்டவர்கள் அறியாமையை விட்டு, கல்வி அறிவும், சுயமரியாதையும் பெற வேண்டும். அதுவரையில் இச்சட்டம் அவர்களுக்குச் சாத்தியமாக இருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார். அதேநேரம் தனி வாக்காளர் தொகுதி முறையில் தொகுதிகள் அதிகரிக்கப்பட்டதால், இம்முறை இரட்டை வாக்குரிமையின் சிறப்புத் தன்மையைப் பெற்றுவிட்டதாக தான் கருதவில்லை என்பதில் தீர்க்கமாக இருந்தார்.
ஆனால் 1935 சட்டத்தின்படி அமைக்கப்பட்ட மாகாண ஆட்சிகள், 1937 ஏப்ரலில் நடைமுறைக்கு வந்து, இரண்டாம் உலகப் போர் காரணமாக 1939 அக்டோபரிலேயே காங்கிரஸால் கலைக்கப்பட்டுவிட்டன. இரண்டாம் உலகப் போர் காலத்தில் 1919 மாண்டேகு செம்ஸ் சட்டத்தின்படி, இந்திய மாகாணங்களில் கவர்னர் ஆட்சியே நடந்தது. மேலும், பாகிஸ்தான் கோரிக்கையின் பொருட்டு எழுந்த புதிய சூழல் முஸ்லிம்களுக்கான தனிவாக்காளர் தொகுதிகளின் மீதே கடும் வெறுப்பை சாதி இந்துக்களுக்கு வளர்த்துவிட்டிருந்தது. அவ்வெறுப்போடு சேர்த்து பிரிவினையால் ஊட்டப்பட்ட விஷம், வன்முறையாக வெடித்தது.
இரண்டாம் உலகப் போர், இந்து – முஸ்லிம் கலவரம் என எதிர்பாராத நிலைமைகளால் உருவான இந்தப் பின்னணியிலிருந்து பார்க்கும்போது இரட்டை வாக்குரிமை அம்பேத்கர் எதிர்பார்த்த நலன்களைவிட, மோசமான உடனடி விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கும் என எளிதாக யூகிக்கலாம். காந்தி எச்சரித்தபடி தலித்களை சாதி இந்துக்களின் நிரந்தர எதிரியாக மாற்றியிருக்கும். தலித்களுக்கு இன்றுவரை நீடிக்கும் பொது நீரோட்டத்தில் கலப்பதற்கான கூடுதல் தடையாக, விஷமப் பிரச்சாரத்துக்கான மற்றுமொரு வாகனமாக மாறியிருக்கும்.
இன்னொரு வகையில், சுதந்திரத்தை ஒட்டிய கலவரங்களின் போக்கு மற்றும் பின்னணியைப் பார்க்கும்போது, இந்து – முஸ்லிம் கலவரத்தைப் போலவே, தலித்துகள் மீதும் கொடூரமான தாக்குதல்களும் துண்டாடல்களுமே நிகழும் சூழலுக்கே அது இட்டுச் சென்றிருக்கும் என்றே மதிப்பிட வேண்டியிருக்கிறது. அம்பேத்கர் கணித்தபடி தனி வாக்காளர் தொகுதி இந்துக்களுடன் கலப்பதை அதிகரிக்கவில்லை என்றாலும், அது சாதி இந்துக்களை தலித்களிடமிருந்து அந்நியப்படுத்துவதைக் குறைத்தது. மாறாக, இரட்டை வாக்குரிமை தலித் மக்களை அந்நியப்படுத்துவதற்கான கூடுதல் காரணியாகவே இருந்திருக்கும். இவற்றில், தலித் செயற்பாட்டாளர்களுக்கும், சமூக சிந்தனையாளர்களுக்கும் மாறுபட்ட கருத்திருக்கலாம். என்றாலும், காந்தி – அம்பேத்கர் முரணை மையமாக வைத்து எழும் வெறுப்பு என்பதுகூட உரையாடலுக்கு வழியுள்ள விஷயமாகவே இருக்கிறது.
**காந்தியும் நேதாஜியும்**
ஆனால், காந்திக்கும் நேதாஜிக்கும் இடையிலான முரண்பாடுகள் இத்தகையது அல்ல. அம்பேத்கரைப் போல சமூக விடுதலை லட்சியம் எதுவும் அவருக்கு இருந்ததில்லை. தமிழ்நாட்டில் நேதாஜிக்கு இருக்கும் ஆதரவுத்தளம் முழுக்க பிம்பங்களால் ஆனது. இங்கு பொதுப்புத்தியின் முன்னால் நேதாஜியும், காந்தியும் இரு வெவ்வேறு பிம்ப மலைகளாக நிற்கின்றனர். வீரம், ஆக்ரோஷம், துடிப்பு, இளமைத்துவம், கிளர்ச்சி ஆகியவற்றின் அடையாளமாக நேதாஜி பார்க்கப்படுகிறார். இதற்கு நேரெதிரான ஒரு பிம்பமாக காந்தி படிந்திருக்கிறார்.
உண்மையில் காந்திக்கும், நேதாஜிக்குமான உறவு எப்படிப்பட்டது?
1928 சைமன் குழு பரிந்துரைகள் மற்றும் வட்டமேசை மாநாட்டுத் தீர்மானங்கள் அடிப்படையில், 1935 இந்திய அரசுச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அச்சட்டத்தின்படி, இந்தியாவில் கூட்டாட்சி முறை அமல்படுத்தப்படும். அக்கூட்டாட்சியில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்த இந்திய நிலப்பரப்பும், மாகாணங்களும் கூட்டாட்சியாக இயங்கும். பிரிட்டிஷ் இந்தியாவில் இல்லாத மன்னராட்சி சமஸ்தானங்கள் விரும்பினால் அதில் சேர்ந்துகொள்ளலாம். இல்லாவிட்டால், தனிநாடாக இயங்கலாம் என்பதே அச்சட்டத்தின் சாராம்சம். ஆனால், 1935ஆம் ஆண்டு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது கூட்டாட்சித் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
இதுகுறித்து கே.எஸ்.ஆனந்தன் மாநில சுயாட்சி புத்தகத்தில், குறுநில மன்னர்களின் சுயநல நோக்கங்களை இச்சட்டம் நிறைவேற்றாததால், அவர்கள் மேற்சொன்ன விருப்ப சட்ட வாசகத்தை (விரும்பினால் மட்டுமே இணையலாம் – விவேக்) பயன்படுத்தி கடைசிவரை சேரவில்லை. மன்னர்களுக்கு ஒரு வகையாகவும், மாநிலங்களுக்கு ஒருவகையாகவும் இந்திய அரசமைப்பு முறை மாறுபட்டதால், இந்திய விடுதலை இயக்கத்தினரும் இச்சட்டத்தின் மத்திய அரசமைப்பு முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், இச்சட்டத்தின் மத்திய அரசமைப்பு முறை (சமஸ்தானங்களைச் சேர்த்த கூட்டாட்சி முறை – விவேக்) இறுதிவரை அமலுக்கு வரவில்லை: என்கிறார்.
அச்சட்டத்தின் மாகாண உரிமைகள், அதிகாரப் பங்கீட்டுப் பிரிவுகள் மட்டும் 1937ஆம் ஆண்டு ஏப்ரலில் அமலுக்கு வந்தது. இச்சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு, 1936-37, 1937 – 38 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைவராக நேரு இருந்தார். 1937இல் நடந்த மாகாணங்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் பெருவாரியாக வெற்றிபெற்றது.
இந்தப் பின்னணியில் நேதாஜி 1938 பிப்ரவரியில் அரிபுரா மாநாட்டில், அகில இந்திய காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேதாஜி, நேருவைப் போல காந்தியுடன் தனிப்பட்ட உறவுகளைப் பேணிவந்தவர் அல்ல என இந்திய வரலாறு புத்தகத்தில் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் குறிப்பிடுகிறார்.
நேதாஜி குறித்து அவர் தலைவராகத் தேர்தெடுக்கப்படுவதற்கு முன்பு, 1.11.1938 அன்று காந்தி பட்டேலுக்கு எழுதிய கடிதத்தில், நேதாஜி நம்பகத்தன்மை மிக்கவரே இல்லை. இருந்தாலும் அவரைத் தவிர அடுத்த தலைவராக வரக்கூடியவர் வேறு யாருமில்ல என்கிறார். இதற்குக் காரணம் இருந்தது.
(நாளை தொடரும்)�,”