Kகுரலோசை குன்றாத `இளைய நிலா’!

public

எஸ்.பி.பி. என்றதும் நம் மனதில் `இளைய நிலா பொழிகிறது’ பாடல் இசைமழையாய் பொழிகிறதல்லவா? ஆம். இன்று நம் எஸ்.பி.பி.யின் 71வது பிறந்தநாள். 1946 ஜூன் 4இல் ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்துள்ளார். எஸ்.பி.பி. தமிழில் முதலில் பாடியது `சாந்தி நிலையம்’ படத்தில் வரும் `இயற்கையெனும் இளைய கன்னி’ என்ற பாடல்தான். ஆனால் அப்பாடல் வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த `அடிமைப் பெண்’ திரைப்படத்தில் பாடிய `ஆயிரம் நிலவே வா’ வெளிவந்தது.

அதன் பின்னர் பல பாடல்கள் பாடியிருந்தாலும் காதல் ஓவியம் படத்தில் இளையராஜாவின் இசையில் பாடிய `சங்கீத ஜாதி முல்லை’ பாடல் பெரிய வெளிச்சம் தந்தது. பல இசைக் கச்சேரிகளில் இப்பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. எஸ்.பி.பி. மேடைகளில் அதிகம் பாடிய பாடல் இதுவாகத்தான் இருக்கும். இயக்குநர் வசந்தின் `கேளடி கண்மணி’ படத்தில் `மண்ணில் இந்த காதலன்றி’ பாடல் பாடியிருப்பார். அப்பாடலில் பல்லவி அடுத்து சரணத்தில் மூச்சுவிடாமல் பாடி பாடகர்கள் அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அப் பாடலை இளைஞர்கள் பலர் மூச்சு விடாமல் பாட பயிற்சி எடுத்த காலமும் உண்டு.

இளையராஜா, எஸ்.ஜானகி, எஸ்.பி.பி கூட்டணி 80-களின் பிற்பகுதியில் பெரும் புரட்சி செய்தது எனலாம். டூயட் பாடல்கள் என்றால் அது எஸ்.ஜானகியும், எஸ்.பி.பியும் தான் என்று சொல்லுமளவுக்கு பாடியிருப்பார்கள். நீங்கள் கேட்டவை படத்தில் இடம்பெற்ற `ஓ வசந்த ராசா’ பாடலையும், இளமை காலங்கள் படத்தில் இடம்பெற்ற `இசை மேடையில்’ பாடலையும் சொல்லலாம். உண்மையில் காதலர்கள் பாடியது போல இருவரும் பாடியிருப்பார்கள்.

தனிப்பாடல்கள் பல பாடியிருந்தாலும் இவர் பாடிய சோக கீதங்களான `வானுயர்ந்த சோலையிலே’, `மலையோரம் வீசும் காத்து’, `நான் பாடும் மௌனராகம்’, `மன்றம் வந்த தென்றலுக்கு’ முதலான பாடல்கள் காதல் இளைஞர்களின் காயமாற்றியுள்ளன. பரத்வாஜ் இசையில் வைரமுத்து வரிகளில் உருவான `சத்தமில்லாத தனிமை கேட்டேன்’ பாடலை இவர் மூச்சு விடாமல் பாடி சாதனை படைத்துள்ளார். உலகில் இன்றளவும் யாரும் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியதில்லை. கே.வி.மகாதேவன் தொடங்கி இன்றைய ஏ.ஆர்.ரஹ்மான் வரை பல இசையமைப்பாளர்களோடும், பி.சுசீலா தொடங்கி இன்றைய ஸ்ரேயா கோஷல் வரை பல பாடகிகளோடும் இணைந்து பணியாற்றியுள்ளார். இதுவரை 40,000 பாடல்களுக்கு மேல் தமிழ் உள்பட இந்திய மொழிகள் பலவற்றில் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

6 முறை தேசிய விருதுகளையும், தொடர்ச்சியான ஃபிலிம்ஃபேர் விருதுகளையும், நந்தி விருதுகள், தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் விருதுகளையும் மலர்க்கொத்துகளாய் குவித்துள்ளார். குழந்தைப்பருவம் முதல் ஓய்வெடுக்கும் முதுமை வரை வாழ்வின் எல்லா காட்சிகளிலும் பயணித்த குரலுக்கு எழுதுவதைத் தவிர வேறென்ன செய்யமுடியும். முதுமையடைந்த போதிலும் இன்னும் குரலில் தோய்வடையாமல் ஓசை குன்றாத இளைய நிலவாய் இன்றும் ஜொலிக்கிறார் நம் எஸ்.பி.பி.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *