kகளவாணி 2: ‘சக்ஸஸ் மீட்’ என்ற மாயத்தோற்றம்!

Published On:

| By Balaji

**ராமானுஜம்**

இல்லாத ஒன்றை இருப்பது போன்று காட்டுவதும், தனிமனிதனால் எப்போதுமே செய்ய முடியாத செயல்களை செய்வதாக காட்டுவதும் சினிமாவில் மட்டுமே சாத்தியமானது. அது பொய் என தெரிந்தும் சினிமா ரசிகன் ரசித்து கடந்து செல்கிறான்.

அதே பாணியை கதாநாயகர்கள் தங்கள் சம்பளத்தை நிலையாக வைத்துக் கொள்ள, தாங்கள் நடித்த படங்கள் மாபெரும் வெற்றி என 48 மணி நேரத்தில் வெற்றி விழாவை கொண்டாட பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விடுகின்றனர்.

இப்படிப்பட்ட நிகழ்வில் அந்த படத்தின் பட்ஜெட் என்ன, வியாபார தகவல்கள், வசூல் விபரங்கள் எதுவும் வெளிப்படையாக கூறப்படுவதில்லை. பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்புகிற போது, வசூல் விபரங்களைக் கூறினால் ஐ.டி. பிரச்சினை வரும் எனக் கூறி கேள்விகளிலிருந்து நழுவுவார்கள்.

படத்தை விலைக்கு வாங்கிய விநியோகஸ்தர்களோ, திரையிட்ட திரையரங்கு உரிமையாளர்களோ இது போன்ற போலித்தனமான வெற்றி விழா கொண்டாட்டங்களுக்கு அழைக்கப்படுவது இல்லை , அவர்களும் வர ஆசைப்படுவதும் இல்லை.

தட்டு தடுமாறி நீண்ட போராட்டங்களுக்கு பின் வெளியான படம் களவாணி – 2. இப்படத்தின் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் கதாநாயகனாக விமல் நடித்த படங்கள் களவாணி மற்றும் வாகை சூட வா. இதில் வாகை சூட வா அப்படத்தின் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய படமாகும்.

களவாணி – 2 மிகப் பெரும் வெற்றி பெற்றதாக நேற்று மாலை(ஜூலை 17) சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் சற்குணம், நடிகர் விமல் இருவரும் அறிவித்ததைக் கண்டு படத்தை திரையிட்ட திரையரங்கு வட்டாரம் அதிர்ச்சியடைந்துள்ளது.

இப்படத்தின் நெகட்டிவ் உரிமை வாங்கிய ஸ்கீரீன் சென் நிறுவனம் படத்தயாரிப்பு, விநியோகம், வியாபாரம் ஆகியவற்றில் வெளிப்படை தன்மை, நேர்மையை கடைப்பிடிக்கும் நிறுவனமாக தனது செயல்கள் மூலம் நிருபித்து வந்துள்ளது. இந்நிறுவனம் களவாணி – 2 படம் குறைந்த பட்ச லாபகரமான படம் என்று கூட அறிவிக்கவில்லை.

படத்தின் தமிழ்நாடு உரிமை வாங்கிய கஸ்தூரி பிலிம்ஸ் பேசிய தொகையை முழுமையாக செலுத்த முடியாததால் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் ஏரியா உரிமைகளை ஸ்கீரீன் சென் நிறுவனமே திரும்ப பெற்று நேரடியாக ரிலீஸ் செய்தனர்.

தமிழகத்தில் களவாணி – 2 சுமாராக ஓடியது திருச்சி, தஞ்சை, கும்பகோணம் பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் மட்டுமே. தமிழகமெங்கும் முதல் நாள் தியேட்டர்களில் ஒரு காட்சிக்கு 100 டிக்கட் விற்பனையாவதே போராட்டமாக இருந்தது என்கின்றனர் தியேட்டர் மேனேஜர்கள்.

களவாணி – 2 தமிழ்நாடு உரிமை 4.25 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. திரையரங்குகள் மூலம் விநியோகஸ்தர்களுக்கு கிடைத்த வருவாய் சுமார் 3 கோடி ரூபாய். எஞ்சிய1 .25 கோடி இனி வசூல் மூலம் கிடைக்காது, படத்தை ரீலீஸ் செய்வதற்கான செலவு ரூபாய் ஒரு கோடி ஆக மொத்தம் 2.25 கோடி ரூபாய் மூலதன நஷ்டத்தை ஏற்படுத்திய களவாணி – 2 படத்தை வெற்றிப் படம் என இயக்குநர் சற்குணம், நாயகன் விமல் கூவுவது தங்கள் சம்பளம் குறைந்து விடாமல் இருக்க பொய்யான மாய தோற்றத்தை உருவாக்கவே என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.

**

மேலும் படிக்க

**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share