�ஜம்மு காஷ்மீரில் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது பதான்கோட் மாவட்ட நீதிமன்றம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதியன்று காணாமல்போனார். அதன்பின், ஒருவாரம் கழித்து அவரது சடலம் ராசானா என்ற வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. முஸ்லிம் பழங்குடியினத்தைச் சேர்ந்த அந்த சிறுமி கடத்தப்பட்டு, போதைப்பொருள் உட்கொள்ள வைக்கப்பட்டு, கடுமையாகப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்டது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது.
இந்த வழக்கில் காஷ்மீர் போலீசார் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று சில அமைப்புகள், கட்சிகள் போராட்டம் நடத்தின. அதன்பின், அரசு அதிகாரி உட்பட 7 பேருக்கு இந்த பாலியல் வல்லுறவுக் கொலை வழக்கில் தொடர்பிருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு பஞ்சாப்பிலுள்ள பதான்கோட் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய விசாரணை, கடந்த 3ஆம் தேதியன்று முடிவுற்றது. இன்று (ஜூன் 10) இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார் நீதிபதி தேஜ்விந்தர் சிங். கைதான 7 பேரில் கிராமத் தலைவர் சஞ்சி ராம், காவல் துறையைச் சேர்ந்த தீபக் காஜூரியா, சுரேந்தர் வர்மா, திலக் ராஜ் உட்பட 6 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
�,”