அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.பாலமுருகனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்து நலம் விசாரித்தார்.
துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ராஜா, பாலமுருகன், சுந்தர் என்று மூன்று தம்பிகள் உள்ளனர். இதில் ராஜா பெரியகுளம் நகராட்சித் தலைவராகப் பதவி வகித்துள்ளார். மற்றொரு தம்பியான பாலமுருகன் பெரியகுளத்தில் பால் பண்ணை நடத்தி வருகிறார். கடந்த 1ஆம் தேதி பாலமுருகனுக்குச் சுவாசக் குழாய் பிரச்சினையால் திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பாலமுருகன் சேர்க்கப்பட்டார். அவரை சிகிச்சைக்காக சென்னை அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர். இதைத் தொடர்ந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பாலமுருகன், கடந்த சில நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாலமுருகனை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் ஆகியோர் நேற்று (ஜூலை 11) நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து உடல்நலம் விசாரித்தனர். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். சந்திப்பின்போது துணை முதல்வர் பன்னீர்செல்வமும் உடனிருந்தார்.�,