ஓ.பன்னீர்செல்வம் 2017 பிப்ரவரி முதல் வாரத்தில் தியானம் தொடங்கி தர்ம யுத்தம் நடத்தியபோது அவருக்கு ஆதரவாக இருந்தவர் முன்னாள் அமைச்சரும், ஜெயலலிதா அமைத்த கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் முக்கியமானவருமான கே.பி.முனுசாமி.
ஜெயலலிதா இருக்கும்போதே, ‘நீங்கள் பிடித்துவைத்தால்தான் பிள்ளையார். இல்லையென்றால் யாரும் சாணிதான்’ என்று சசிகலாவை கடுமையாக தாக்கி பொதுக்குழுவில் பேசியவர் கே.பி.முனுசாமி. அந்த வகையில் சசிகலாவை கடுமையாக எதிர்க்கிறாரே என்றுதான் பன்னீர் பக்கம் அணி வகுத்தார் கே.பி.முனுசாமி.
தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.பன்னீருக்கு வட மாவட்டங்களில் இருந்தும் பலர் ஆதரவு தெரிவிக்கக் காரணமானவர் கே.பி.முனுசாமிதான். ஆனால் தற்போது ஓ.பன்னீர் மீது கே.பி.முனுசாமி கடுமையான அதிருப்தியில் இருப்பதாகவும், ஓ.பன்னீருடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை முடிந்தவரை தவிர்த்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்ட கே.பி.முனுசாமி தனது தொகுதியில் செலவு நிலவரம் பற்றி பன்னீரிடம் சில குறைகளைச் சொல்லியிருக்கிறார். ஆனால் தேர்தல் முடியும் வரை அதை சரிசெய்யவே இல்லையாம் பன்னீர். ஆனால் தனது மகன் போட்டியிடும் தேனி தொகுதியின் மீதே சிறப்பு கவனம் செலுத்தினார் ஓ.பன்னீர் என்கிறார்கள் கே.பி.முனுசாமி ஆதரவாளர்கள்.
தேர்தல் முடிவுக்குப் பின் இதுபற்றியெல்லாம் தனக்கு நெருங்கிய வட்டாரத்தில் புலம்பித் தீர்த்திருக்கிறார் கே.பி.முனுசாமி. மேலும் கடந்த ஜூன் 5 ஆம் தேதி அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனை சந்திக்க ஓ.பன்னீர் சென்றிருக்கிறார். எப்போதுமே கட்சி ரீதியான இதுபோன்ற சந்திப்புகள், திருமணங்கள் போன்றவற்றுக்கு பன்னீர் செல்லும்போது கே.பி.முனுசாமியும் உடன் செல்வார். ஆனால் மதுசூதனனைச் சந்திக்க ஓ.பன்னீர் செல்லும்போது முனுசாமி போகவில்லை. அதுமட்டுமல்ல, கடந்த சில தினங்களாகவே ஓ.பன்னீர் செல்வத்துடன் நிகழ்ச்சிகளில் கே.பி.முனுசாமி கலந்துகொள்ளவில்லை.
நேற்று ராஜன் செல்லப்பாவின் கருத்து ஓ.பன்னீருக்கு எதிரானது என்று வெளிப்படையாக தெரிந்த நிலையிலும் இதுபற்றி கருத்து தெரிவித்த கே.பி.முனுசாமி, ‘அது அவரது சொந்தக் கருத்து’ என்று சொன்னதோடு முடித்துக் கொண்டார். தனக்கு ஆதரவாக முனுசாமி பேசுவார் என்று எதிர்பார்த்த ஓ.பன்னீருக்கே இது அதிர்ச்சியளித்தாக சொல்கிறார்கள் அவரது வட்டாரத்தில்.
மேலும் கே.பி.முனுசாமியோடு பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சில அமைச்சர்கள், “நீங்க எடப்பாடிக்கு ஆதரவா இருக்கணும்னு நாங்க கேட்கலை. கட்சியோட சீனியர் நீங்க. கட்சிக்கு எது நல்லது, யார் நல்லது செய்வாங்கனு பார்த்து முடிவெடுங்க. கிருஷ்ணகிரிக்கும் சேலத்துக்கும் ரொம்ப பக்கம். கூப்பிட்ட குரலுக்கு சேலம் ஓடி வரும். தேனிக்கும் கிருஷ்ணகிரிக்கும் ரொம்ப தூரம். இது உங்களுக்கே தெரிஞ்சதுதான்” என்று சொல்லியிருக்கிறார்கள்.
சேலம் –கிருஷ்ணகிரி நெருக்கமாகிக் கொண்டே இருக்கிறது என்கிறார்கள் கே.பி.முனுசாமி வட்டாரத்திலேயே.
இந்நிலையில் இன்று (ஜூன் 9) இதுகுறித்து கருத்து தெரிவித்த கே.பி.முனுசாமி, “ராஜன் செல்லப்பா இதுபோன்ற கருத்துக்கள் கூறுவதை தவிர்த்திருக்கலாம். அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. யாரையோ மனதில் வைத்துக்கொண்டு இதுபோன்ற கருத்துக்களைக் கூறக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
**
மேலும் படிக்க
**
**
[பன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்!](https://minnambalam.com/k/2019/06/09/40)
**
**
[ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!](https://minnambalam.com/k/2019/06/09/22)
**
**
[டிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!](https://minnambalam.com/k/2019/06/08/73)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
**
[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)
**
�,”