மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் வாக்களிக்கப் பணம் கொடுத்தால் ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தலும், 18 தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறவிருக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் பறிமுதல் செய்யப்படும் பணம், பதிவு செய்யப்பட்ட புகார்கள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று , மார்ச் 29ஆம் தேதி வரை, 313 கிலோ தங்கம், 370 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூ. 88 கோடி என்று தெரிவித்திருக்கிறார்.
வாக்களிக்கப் பணம் கொடுத்ததாக 833 வழக்குகள் பதிவாகியுள்ளன, அதில் 37 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது வாக்களிக்கப் பணம் கொடுத்தால் அதிகபட்சம் 1 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கச் சட்டத்தில் இடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
தொடர்ந்து இந்தியத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, வரும் 2ஆம் தேதி சென்னை வருகிறார். அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவார் என்று தமிழக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
இதற்கிடையே இன்று மாலை இந்தியத் தேர்தல் ஆணையம், பறிமுதல் செய்யப்படும் பணம் நகை குறித்த விவரங்களை வெளியிட்டிருக்கிறது. அதன்மூலம் இதுவரை நாடு முழுவதும் 1354 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதில் அதிகபட்சமாக மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 500 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், ரூ.3.38 கோடி ரொக்கம், ரூ.2.22லட்சம் மதிப்பிலான மதுபானம் என மொத்தம் 509.62 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 185.389 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்துள்ளது.�,