சென்னை அபிராமபுரத்தில் போலி அரசு ஸ்டிக்கர் ஒட்டிய காரை ஓட்டிவந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து வாக்கிடாக்கி, கைவிலங்கு ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று, சென்னை அபிராமபுரம் பகுதியை ஒரு கார் கடந்து சென்றது. அதனை, போக்குவரத்து போலீசார் நிறுத்தினர். அந்த காரின் முன்பகுதியில் கவர்மெண்ட் ஆஃப் இந்தியா, மத்திய சமூக நீதி அமைச்சகம், மனித உரிமை பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
அப்போது, காரில் இருந்த நபர் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தான் அரசு அதிகாரி என்றும், பத்திரிகையாளர் என்றும், அவர்களிடம் மாறி மாறித் தெரிவித்தார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. திடீரென்று, அவர் காரை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். அந்த காரை சோதனை செய்தபோது, அதில் போலீசார் பயன்படுத்தும் வாக்கி டாக்கி, கைவிலங்கு போன்ற சாதனங்கள் இருந்தன. இதையடுத்து, இந்த கார் குறித்த வழக்கு அபிராமபுரம் சட்டம் ஒழுங்கு காவல் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
சட்டம் ஒழுங்கு போலீசாரின் விசாரணையில், இந்த கார் அபிராமபுரம் 4வது தெருவைச் சேர்ந்த ரவிசங்கர் என்பவருக்குச் சொந்தமானது என்று தெரிய வந்தது. தற்போது, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்ற போலீசாரின் விசாரணை தொடர்ந்து வருகிறது.�,