kஉமாதேவி பாடல்கள் வெறும் கோஷங்கள் இல்லை!

public

அன்னை மீனாம்பாள் 25ஆவது நினைவேந்தலில் பாடலாசிரியரும் கவிஞருமான உமாதேவிக்கு ‘எழுச்சி கவிஞர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ், கபாலி, மகளிர் மட்டும், அறம், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் பாடல்கள் எழுதியவர் கவிஞர் உமாதேவி. அவரின் எழுத்துலகப் பணியையும், திரைத்துறை பங்களிப்பையும் பாராட்டும் விதமாக ‘எழுச்சி கவிஞர்’ விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை அறம் திரைப்படத்தில் நடித்த குட்டி நாயகி தன்ஷிகா – மகாலட்சுமி ஆகியோர் வழங்கினர். தலித் பெண்கள் மற்றும் விளிம்புநிலை குழந்தைகள் இணைந்து ரூபாய் 25,000 காசோலையையும் பரிசாக வழங்கினர்.

இந்த நிகழ்வில் பேசிய உமாதேவி, “இந்த விருதைப் பெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நான் வாங்கிய பல விருதுகளைவிட இந்த விருது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக எண்ணுகிறேன். என் சகோதரிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த விழாவில் அறம் திரைப்பட குட்டி நாயகி தன்ஷிகா மற்றும் மகாலட்சுமி ஆகியோரின் கரங்களால் விருது கிடைத்திருப்பது எனக்குக் கிடைத்த மீப்பெரும் அங்கீகாரம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திரைத்துறையில் தனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், “ஒட்டுமொத்த பெண்களின் சுயமரியாதை வாழ்வுக்காகப் போராடியவரும் புத்தரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் தனது ஆசானாக ஏற்றுக்கொண்டவருமான ஈ.வே.ரா. அவர்கள் ‘தந்தை பெரியார்’ என அழைக்கப்பட வேண்டும் என விரும்பினார் அன்னை மீனாம்பாள். எனவே தருமாம்பாள், நாராயணியம்மாள் இவர்களோடு ஆலோசித்து 1938 நவம்பர் 13 அன்று வடசென்னை யானைகவுனி சாலையில் உள்ள ஒத்தவாடை தெருவில் பிரமாண்டமான பெண்கள் மாநாட்டினை ஒருங்கிணைத்தார். இன்று செம்மலர் என்ற தனியொரு மனுஷி ஒருங்கிணைத்த அன்னை மீனாம்பாளின் 25ஆவது நினைவேந்தலில் நாமெல்லோரும் பங்கேற்பதைப் போன்று, நான் எழுச்சி கவிஞர் என்ற பெருமைக்குரிய விருது பெற்றதைப் போன்று அன்னை மீனாம்பாள் என்ற தனியொரு மனுஷி ஒருங்கிணைத்த பெண்கள் மாநாட்டில் மறைமலையடிகளாரின் மகள் நாராயணியம்மாள் தலைமையில் ஈ.வே.ராவுக்கு ‘தந்தை பெரியார்’ என்று பட்டம் வழங்கப்பட்டது வரலாறு.

தமிழ், ஆங்கிலம், இந்தி, மலாய், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி புலமைபெற்ற பெண்ணியவாதியும் களப்பணியாளருமான அன்னை மீனாம்பாள் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, பல்கலைக்கழக செனட் உறுப்பினர், திரைப்பட தணிக்கைக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல உயர்பதவிகளை வகுத்து வந்தவர் என்பதை நாம் இன்றைய தலைமுறைக்கு அறிவுறுத்த வேண்டும்.

உலகம் முழுவதுமுள்ள ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட பெண்ணின் முன்னேற்றத்துக்கும் பின்னால் சமூக விடுதலைச் சிந்தனையுள்ள ஆண்கள் இருக்க வேண்டும். இருந்து வருகின்றனர். எனது வெற்றிக்குப் பின்னாலும் பெண் விடுதலை சிந்தனையுள்ள என் அப்பா குப்பன் அவர்களைத் தொடர்ந்து நிறைய ஆளுமைகள் உள்ளனர். அவ்வைக்கு ஒரு அதியமான், அன்னை மீனாம்பாளுக்கு ஒரு சிவராஜ், அன்னை மாயாவதிக்கு ஒரு கன்சிராம், இந்த உமாதேவிக்கு ஒரு பாரதி பிரபு. என் சமூகம் வழங்கிய இந்த மாபெரும் விருதுக்கு ஈடுசெய்ய எனது கடமை இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து பேசிய எழுத்தாளரும் ஊடகவியலாளருமான கவிதா முரளிதரன், ‘உமாதேவி பாடல்களில் உள்ள சமூக அரசியல் பார்வை’ என்பது பற்றி உரை நிகழ்த்தினார்.

“உமா, பாடலாசிரியராக வேண்டும் என்பதை விட உமாவைப் போல நுண்ணுணர்வும் அரசியல் தெளிவும்கொண்ட ஒரு கவிஞர் தமிழ் சினிமாவுக்குத் தேவை என்று நான் நம்புகிறேன். அதனால் பெரிய மாற்றங்கள் உருவாகாது என்று நினைத்தவர்களுக்கு உமா இன்று அவரது பாடல் வரிகளால் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குநர் ரஞ்சித் அரசியல் தெளிவு ஒரு பெண்ணிடமிருந்தால் அவர் எப்படி குடும்பத்தின் மீதும் குழந்தைகள் மீதும் தாக்கம் செலுத்துகிறார் என்று சொல்லியிருந்தார். அரசியல் தெளிவிருக்கும் பெண்களிடமிருந்துதான் மாற்றம் உண்மையிலேயே தொடங்குகிறது. உமா அப்படியொரு மாற்றத்தைத்தான் திரையுலகில் நிகழ்த்திக் காட்டுகிறார். ரஜினிகாந்துக்காகவே எழுதப்பட்ட எத்தனையோ பாடல்களில் நான் மிக ரசிப்பது, ‘வீர துரந்தரா’ பாடலை. காரணம், அது பேசும் அரசியல். ஒரு காதல் பாடலிலும் பறையிசையின் அனலைப் பற்றி பேச முடிகிறது உமாதேவியால்.

**”வாதாட ஊருக்கு சொல்லித் தந்தாளா

வேதத்த தூரத்தில் ஒத்தி வச்சாளா”**

என்றொரு வரி ‘மகளிர் மட்டும்’ திரைப்படத்தில் ‘அடி வாடி திமிரா’ என்கிற பாடலில் வருகிறது. இது மாதிரியான ஒரு பாடலில்கூட வேறு எந்த பாடலாசிரியராவது இப்படியொரு வரியை வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே.

**”ஆணும் பெண்ணும் ஆட்டம் போட

அண்டம் இது ஆப்பிள் தோட்டம்

ஒண்ணுக்கொண்ணு அடிமைகள் இல்ல”**

என்று சொல்லும்போது ஆண் பெண் சமத்துவ வேதத்தைத் தூரத்தில் வைத்தால் மட்டுமே சாத்தியம் என்று உமா உரத்துச் சொல்வதைப்போல் வேறு யாராலும் சொல்லிவிட முடியாது. அதனாலேயே உமா திரைப்பாடல்களில் பேசும் அரசியல் நிஜமான அரசியல் என்கிறேன். பெரும்பாலான திரைப்பாடல்கள் முன்னிறுத்தும் அரசியல் போல வெறும் கோஷங்கள் இல்லை இவர் பாடல்கள்” என்று பேசியுள்ளார்.

இந்த நிகழ்வு லயோலா கல்லூரி சமூகவியல் துறை பேராசிரியர் செம்மலர் ஒருங்கிணைப்பில் சென்னை கீழ்ப்பாக்கம் SIGA, டான் பாஸ்கோ அரங்கில் நடைபெற்றது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *