மூளைச் சாவடைந்த கேரள இளைஞரின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ததில் மோசடி செய்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே 18ஆம் தேதியன்று கள்ளக்குறிச்சி அருகே விபத்தில் சிக்கிய மணிகண்டன் என்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. மணிகண்டனின் இதயம், நுரையீரல், சிறுநீரகம் தானமாகப் பெறப்பட்டதாகக் கணக்கு காட்டப்பட்டது.
**மருத்துவமனைக்குச் சிக்கல்**
இந்த உடல் உறுப்புகளைப் பெற்று அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனைகளுக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நோயாளிகளைப் புறம் தள்ளிவிட்டு, வெளிநாட்டவருக்கு அந்த உறுப்புகளைப் பொருத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரள இளைஞர் மணிகண்டனின் உடல் உறுப்புகளைத் திருடிய புகாரில், தற்போது போலீஸ் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனையடுத்து, மோசடி செய்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
**முதல்வருக்குக் கடிதம்**
இதில் முறைகேடு நடந்திருப்பதை அறிந்த மணிகண்டனின் உறவினர்கள், உறுப்புகள் திருடப்பட்டதாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கடிதம் எழுதினார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தற்போது காவல்துறை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
**வெளிநாட்டவருக்கு உறுப்பு தானம்**
தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தின் விதிகளை மீறி, மணிகண்டனின் உடல் உறுப்புகள் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உடல் உறுப்புக்கான தேவையில் இந்தியர்கள் காத்திருந்த போதும், அவற்றை வெளிநாட்டு நபர்களுக்குக் கொடுத்தது தெரியவந்துள்ளது. அது மட்டுமில்லாமல், தானம் பெற்றவர் அறுவை சிகிச்சை முடிந்த சில மணி நேரத்திலேயே உயிரிழந்துள்ளார். இதில், தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையத்தைச் சாராத சிலருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. வேறு ஒருவருக்காக உடல் உறுப்பை பெற்றுக்கொண்டு, அதனை சம்பந்தம் இல்லாத மற்றொரு நபருக்கு பொருத்திவிடுவதாகவும் கூறப்படுகிறது.
**பெற்றோருக்கு மூளைச் சலவை**
மணிகண்டன் விவகாரத்தில், அவரது குடும்பத்தினர் முதலில் உடல் உறுப்பு தானத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மூன்று முறை மறுப்பு தெரிவித்த நிலையில், அவர்களை மூளைச்சலவை செய்தபிறகே உடல் உறுப்பு தானத்திற்குச் சம்மதம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஒரு நபருக்காக வாங்கப்பட்ட சிறுநீரகம் வேறு நபருக்குப் பொருத்தப்பட்டதும், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஒருவருக்காக இதயம் தானம் பெறப்பட்டு, அது லெபனான் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்குப் பொருத்தப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
**மூத்த அதிகாரிகளுக்குத் தொடர்பு**
இதயம் சரியாகப் பொருந்தாத காரணத்தினால், அந்த நபர் அறுவை சிகிச்சைக்குப் பின் சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தார். இதுபோன்ற உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை விவகாரத்தில் தமிழக அரசின் சில மூத்த அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
�,”